இப்போது வெயில் காலம். பார்த்து பார்த்து இட்லி மாவு ஆட்டி வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் ஃபிரிட்ஜில் வைத்தால் கூட, அந்த மாவு புளித்து விடுகிறது. மாவை அரைக்கும் போது ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். இட்லி மாவு ஏழு நாட்களுக்கு புளிக்காமல் இருக்கும். தினமும் இட்லி தோசையை விருப்பமாக சாப்பிடுபவர்களுக்கு இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் அந்த சின்ன சின்ன டிப்ஸை நாமும் தெரிந்துகொள்வோம்.
Tip 1:
மாவு அரைக்க இட்லி அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கும்போது, 3 லிருந்து 4 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும். சில பேர் இரவு முழுவதும் இட்லி அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை மாவு அரைப்பார்கள். இப்படி 8 மணி நேரம் 9 மணி நேரம் அரிசி தண்ணீரில் ஊரினால் அரைத்த மாவு சீக்கிரம் புளித்துவிடும்.
Tip 2:
இதேபோலதான் உளுந்தை இட்லிக்கு ஊற வைக்கும்போது 1 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும். நீண்ட நேரத்திற்கு உளுந்து ஊரி விட்டால் சில சமயம், உளுந்தை ஆட்டி எடுக்கும் போது உபரியாக பொங்கி வராது. அதேசமயம் உளுந்து நீண்ட நேரம் ஊறினாலும் சீக்கிரம் புளித்துவிடும்.
Tip 3:
தனித்தனியாகத்தான் உளுந்தையும் அரிசியையும் கிரைண்டரில் போட்டு அரைக்க போகின்றோம். இப்படி உளுந்தையும் வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்கும் போது நீண்ட நேரம் ஆட்டக்கூடாது. 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் உளுந்து புசுபுசுவென பொங்கி அறைந்து கிடைத்துவிடும்.
Tip 4:
இதேபோலத்தான் அரிசியையும் நீண்ட நேரம் கிரைண்டரில் ஓட விடக்கூடாது. அரிசி உளுந்து இரண்டு பொருட்களையும் அரைக்கும்போது ஐஸ் வாட்டரை ஊற்றி அரைக்க வேண்டும். காரணம் கிரைண்டரில் மோட்டர் சூடாகும் போது, மாவும் சூடாகி, சீக்கிரம் புளித்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
Tip 5:
அடுத்து உளுந்து அரிசி மாவு இரண்டையும் வழித்து ஒரு டப்பாவில் மாற்றி விடுவீர்கள். (இப்படி டப்பாவில் மாற்றும்போது, கை படாமல் கிரைண்டரோடு எடுத்து டப்பாவில் ஊற்றிக் கொண்டாலும் நல்லது.) இரண்டு மாவையும் கையை போட்டு கரைக்க வேண்டாம். ஒரு கரண்டியை வைத்து கரைத்து உப்பு போடாமல் அப்படியே மூடி வைத்தால் மாவு மீடியமாக தான் புளித்து வரும். ரொம்பவும் புசுபுசுவென புளித்துப் பொகாது. (கையைப் போட்டு கரைக்கும் போது, நம் கை சூடு பட்டு மாவு சீக்கிரம் புளித்து வந்து விடும். அதுவும் சூட்டு உடம்பு உள்ளவர்கள் மாவை கையால் கரைக்கவே கூடாது.)
Tip 6:
ஓரளவுக்கு புளித்த மாவை தேவைக்கு ஏற்ப மட்டும் வெளியில் வைத்து உப்பு போட்டு கரைத்து சமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். மீதி மாவை உப்பு போடாமல் மூடி அப்படியே பிரிட்ஜில் வையுங்கள். இந்த மாவு 7 நாட்கள் ஆனாலும் புளித்துப் போகாமல் அப்படியே நன்றாக இருக்கும். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடித்து இருந்தால், உங்கள் வீட்டில் ஒரு முறை இப்படி இட்லி மாவை அரைத்து ஸ்டோர் செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அரைக்கும் இட்லி மாவுக்கும், இந்த இட்லி மாவுக்கும் புளித்து வருவதில் வித்தியாசம் இருக்கும்.