நம்முடைய தலையை சுத்தம் செய்ய இயற்கை நமக்கு கொடுத்த ஒரு பொருள் தான் இந்த சீயக்காய். இந்த சீயக்காயை முறையாக நம்முடைய தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு குறையும். முடி அடர்த்தியாக வளரும். அதே சமயம் நம்முடைய ஸ்கால்ப் சுத்தமாகவும் இருக்கும். நம்முடைய அம்மா பாட்டி இப்படி நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் தலைக்கு குளிக்க இந்த சீயக்காயை தான் பயன்படுத்தி வந்தார்கள். அவர்களுடைய முடி வயதான பின்பும் கொட்டாமல் இருப்பதை நாமும் பார்த்திருப்போம் அல்லவா.
பொதுவாக சீயக்காயை அப்படியே நம்முடைய தலையில் போட்டு கசக்கினால் தலைமுடி உதிர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வெறும் சீயக்காயை அரைத்து தண்ணீரில் போட்டு கரைத்து தலைக்கு குளிக்காதீங்க. கட்டாயமாக வெறும் சீயக்காயோடு வெந்தயம் மட்டுமாவது சேர்த்து அரைத்து தான் தலைக்கு குளிக்க வேண்டும்.
சரி, சீயக்காயை ஊட்டச்சத்து நிறைந்த பொடியாகயாக எப்படி மாற்றுவது. ஒரு சிறிய கிண்ணத்தில் சீயக்காய் தூள் – 1/4 கப், வெந்தயப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், வேப்பிலை பொடி – 1 டேபிள்ஸ்பூன், செம்பருத்தி பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன், நெல்லிக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்தால் சூப்பரான சீயக்காய் தூள் தயார். இதை ஈரம் படாமல் ஒரு கண்டெய்னரில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேல் சொன்ன எல்லா பொருட்களும் உங்களுக்கு பொடியாக ஆர்கானிக் கடைகளில் கிடைத்தால் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கி நன்றாக காயவைத்து பொடி செய்து மேல் சொன்ன அளவில் கலந்து தயார் செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். கடையிலிருந்து சீயக்காய் தூள் வாங்குவதாக இருந்தால் வெறும் தனி சீயக்காய் தூள் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
மேல் சொன்ன படி 5 பொருட்களையும் ஒன்றாக கலந்து சீயக்காய் துளை தயார் செய்து வைத்து விட்டோம். அதிலிருந்து தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த சீயக்காய் தூளை அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் அல்லது அரிசி களைந்த தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றை ஊற்றி பேஸ்டாக கலந்து வைத்து ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பின்பு இந்த சீயக்காயை தலையில் போட்டு கசக்க வேண்டும். தேவைப்பட்டால் முந்தைய நாள் இரவு கூட நாம் இப்படி சீயக்காய் பேஸ்ட் தயார் செய்து வைத்து, மறுநாள் காலை தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தலாம். இது இன்னும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயம்.
நீங்கள் எப்போது சியக்காயை தலைக்கு போடுவதாக இருந்தாலும் இந்த முறைப்படி போடலாம். வாரத்தில் இரண்டு நாள் சீயக்காய் போட்டு தலைக்கு குளிப்பீர்களா. இரண்டு நாளுமே இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்துங்கள். நிச்சயமாக உங்களுடைய முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். முடி கொட்டுவது குறையும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் தலையை சுத்தம் செய்யக்கூடிய ஒரு பேக் தான். இது ட்ரை பண்ணி பாருங்க.