பொதுவாகவே சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள வெஜ் குருமா, உருளைக்கிழங்கு மசாலா இப்படித்தான் ட்ரை பண்ணுவோம். ஆனால் உடலுக்கு புரோட்டின் சத்தை கொடுக்கக்கூடிய ராஜ்மாவை வைத்து இப்படி ஒரு கிரேவியை முயற்சி செய்து பாருங்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடவும் இது சூப்பரா இருக்கும். வாங்க ரெசிபிக்குள் போவோம்.
ராஜ்மா கிரேவி செய்ய வேண்டும் என்றால் முந்தைய நாள் இரவே ராஜ்மாவை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 8 மணி நேரம் ஊறிய ராஜ்மாவை ஒரு முறை கழுவி விட்டு, குக்கரில் போட்டு ராஜ்மா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு வேக வைத்து, தண்ணீரை வடித்து ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ராஜ்மா அப்படியே இருக்கட்டும். ராஜ்மா வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். ஏதாவது சூப் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி பட்டை – 1, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து பொரிய விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, தோல் உரித்த பூண்டு பல் – 10, இரண்டு இன்ச் – இஞ்சி துண்டு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய – 2 தக்காளி பழங்களை சேர்த்து தேவையான அளவு உப்பு, மல்லித்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் போட்டு, 30 செகண்ட்ஸ் வரை வதக்கி விட்டு, 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடம் வரை இந்த எல்லா பொருட்களையும் அப்படியே வேகவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கிரேவியை தாளித்து விடலாம். எண்ணெய் – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இந்த எண்ணெயில் ஊற்றி ஒரு நிமிடம் போல கலந்து விட்டு வேக வைத்திருக்கும் ராஜ்மாவை கடாயில் கொட்டி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து கொதிக்க வைத்தால் சூப்பரான ராஜ்மா கிரேவி 2 நிமிடத்தில் தயாராகிவிடும். (நிறைய தண்ணீர் வேண்டாம். இந்த கிரேவி கொஞ்சம் திக்காக இருந்தால் தான் சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.) இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி பரிமாறுங்கள். அட்டகாசமான ஹெல்த்தியான கிரேவி தயார்.