- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்எலும்புகளை வலுப்பெற செய்யும் உளுந்து சட்னி! ஈசியாக எப்படி வீட்டிலேயே 10 நிமிடத்தில் கிராமத்து ஸ்டைலில்...

எலும்புகளை வலுப்பெற செய்யும் உளுந்து சட்னி! ஈசியாக எப்படி வீட்டிலேயே 10 நிமிடத்தில் கிராமத்து ஸ்டைலில் ருசியுடன் அரைப்பது?

- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் இந்த உளுந்து சட்னி ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். பொதுவாக பலவிதமான சட்னிகளுக்கு உளுந்து கண்டிப்பாக தேவை. ஆனால் இந்த உளுந்தை பிரதானமாக கொண்டு செய்யப்படும் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு இடுப்பு எலும்பு வழு பெறும். ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த உளுந்து சட்னி சுவையாக எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட எப்படி எளிதாக வீட்டில் அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 7, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – ஐந்து பல், தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து, கடலை பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை.

- Advertisement -

உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:
உளுந்து சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாலு டேபிள் ஸ்பூன் அளவிற்கு முழு வெள்ளை உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். கருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்தாலும் ஆரோக்கியமான சுவையுடன் இருக்கும்.

உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உங்களுடைய காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாசம் வர லேசாக வறுத்த பின்பு, ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு வதக்கி விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த பொருட்கள் எல்லாம் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது பூண்டு பற்களை நறுக்கி சேருங்கள். அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்து மசிய வதக்கி விட வேண்டும். பின்னர் இவற்றையும் அப்படியே ஆற விட்டு விடுங்கள்.

மிக்ஸி ஜாரை இயக்கி கொரகொரவென்று முதலில் போட்ட பொருட்களை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆற வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு முறை மிக்ஸியை இயக்கி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த உளுந்து சட்னி ரொம்பவும் நைசாக இல்லாமல் சற்று கொரகொரவென்று அரைத்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு ஒன்று கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் கொட்டி கலந்து வைத்தால், அடடா அற்புதமா இருக்குன்னு நீங்களே சொல்லுவீங்க, அவ்வளவு சுவையா இருக்கப் போகிறது.

சற்று முன்