காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – இரண்டு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா- கால் ஸ்பூன், சோம்புத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கெட்டி தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன், காலிஃப்ளவர் கால் கிலோ, மிளகுத்தூள் – கால் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ அளவிற்கு காலிஃப்ளவரை எடுத்து அதன் அடிப்பகுதியில் இருக்கும் தண்டு பகுதியை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். காலிஃப்ளவர் மேல்பாகத்தை சிறுசிறு துண்டுகளாக உங்களுக்கு எப்படி தேவையோ, அந்த அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். காலிஃப்ளவரில் நுண்ணிய புழுக்கள் இருக்கும் எனவே ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடுங்கள். பிறகு அதை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் புழுக்கள் இருந்தாலும் தண்ணீருடன் போய்விடும்.
இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்குங்கள். வெங்காயம் பிரவுன் நிறமாக மாறும் பொழுது, தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
மேற்கூறிய அளவின்படி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசாலா வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். எண்ணெயிலேயே மசாலா வாசம் போக வதங்கி வரும் பொழுது இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கெட்டி தயிரை சேர்த்து மீண்டும் வதக்குங்கள். தயிர் எல்லாம் ஒன்று சேர்ந்து திரண்டு வரும் பொழுது, சுடுதண்ணீரில் ஊற போட்டு எடுத்திருக்கும் இந்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
காலிஃப்ளவரில் மசாலா உள்ளே இறங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். எட்டிலிருந்து பத்து நிமிடம் மூடி வைத்து இடை இடையே கிண்டி விட்டால், காலிஃப்ளவர் நன்கு வெந்து வரும். தண்ணீர் எல்லாம் வற்றி நன்கு வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி, நறுக்கிய மல்லித்தழை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை தயார்! சாதம், இட்லி, சப்பாத்திக்கு கூட தொட்டுக்கலாம். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி எல்லோரையும் அசத்திடுங்க!