ஆட்டுக்கால் போட்டு தான் பாயா வைப்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி இருந்தால் இந்த சைவ பாயாவை ஒரு முறை வைத்து பாருங்கள். சுட சுட இட்லியின் மேல் இதை ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கல் தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி இவைகளுக்கும் இது ஒரு செம்ம சைடிஷ். சூப்பரான இந்த பாயா ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து அசத்தலாம்.
இந்த பாயாவுக்கு முதலில் ஒரு அரவை நாம் தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/4 கப், இஞ்சி தோல் சீவி நறுக்கியது – 2 இன்ச், பூண்டு பல் தோல் உரித்தது – 7 பல், பச்சை மிளகாய் – 6, சோம்பு – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், கசகசாவை 1 ஸ்பூன் – 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து போடவும். முந்திரி பருப்பு – 5, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்க்கப்போவது கிடையாது. பச்சை மிளகாய், மிளகு காரம் தான். உங்களுக்கு தேவைக்கு ஏற்ப பச்சை மிளகாயின் காரத்தை கூட்டியோ குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்.
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை – 1, பட்டை – 2, கிராம்பு – 3, கல்பாசி – சிறியது, சோம்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, புதினா இலைகள் – 10, மல்லி தழை சிறிதளவு, போட்டு நன்றாக வதங்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்த உடனேயே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். நாம் அரைத்த விழுதில் எல்லா பொருட்களையும் பச்சையாக தான் சேர்த்திருக்கின்றோம் அல்லவா. ஆக பச்சை வாடை நீங்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து பொறுமையாக வதக்குங்கள். விழுதின் பச்சை வாடை நீங்கியதும் நறுக்கிய – 4 தக்காளி பழங்களை போட வேண்டும். தக்காளி பழங்களை ரொம்பவும் பொடியாக சாப் செய்யக்கூடாது. ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டி போட வேண்டும். தக்காளி பழம் குழைய குழைய வதங்க கூடாது.
தக்காளி பழம் ஆங்காங்கே குருமாவில் தெரிய வேண்டும். அந்த அளவிற்கு மட்டுமே வதக்கி விட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து மேலே கொத்தமல்லி தழைகளை தூவி குக்கரை மூடி மீடியம் ஃப்ளேமில் 2 விசில் வைத்தால் அசத்தலான வாசத்தில் சைவ பாயா தயார்.
சுட சுட இட்லிக்கு இதை மேல ஊற்றி அப்படியே சுவைத்து பாருங்க. வேற என்னங்க வேணும் இதுதான் சொர்க்கம். இந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கால் பாயாவுக்கு பதில் இந்த சைவ பாயாவை வித்தியாசமாக வைத்து சாப்பிட்டு தான் பாருங்களேன். இதன் ருசி புரியும்.