உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய நாவிற்கு சுவையை தரக்கூடிய அருமையான ஒரு கருவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தொக்கை செய்து வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. சாதம் வடித்து சுடசுட சாதத்தில் இந்த கருவேப்பிலை தொக்கை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸுக்கு இந்த கருவேப்பிலை தொக்கை வெள்ளை சாதத்தில் பிசைந்து கூட குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு கட்டிக் கொடுக்கலாம். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கருவேப்பிலை தொக்கு ரெசிபி செய்ய யாரும் மிஸ் பண்ணாதீங்க.
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீரில் புளியை ஊற வைக்க வேண்டாம். அந்த புளி மூழ்கும் அளவிற்கு மட்டும் சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொண்டால் போதும்.
பிறகு இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைகளை நன்றாக கழுவி விட்டு, ஈரம் இல்லாமல் நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளுங்கள். பச்சை கருவேப்பிலையில் இந்த துவையல் செய்தால் தான் நன்றாக இருக்கும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்தயம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 7, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். நாம் சேர்த்த இந்த பொருட்கள் எல்லாம் மணக்க மணக்க வாசம் வீசும் வரை வருபட்டு வந்த பிறகு எண்ணெயிலிருந்து வடிகட்டி இதை தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும் அல்லவா. அந்த எண்ணெயில் 2 கைப்பிடி அளவு தயாராக சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவேப்பிலைகளை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டால் போதும். கருவேப்பிலை மொறு மொறுப்பாக வருபடக்கூடாது. லேசாக வதங்கினால் போதும். கருவேப்பிலை ரொம்பவும் மொறுமொறுன்னு வறுபட்டால் இது பொடி போல மாறிவிடும். துவையல் போல நமக்கு கிடைக்காது. அதனால்தான். லேசாக வதக்கிய கருவாப்பிலையையும் தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
சிறிய மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் வறுத்த மசாலா பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதன் பின்பு வதக்கி வைத்திருக்கும் கருவேப்பிலைகளை மசாலா பொருட்களோடு சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்க வேண்டும். எல்லா பொருட்களும் ஒன்றும் இரண்டுமாக அரைபட்டு வந்திருக்கும். இப்போது, இந்த சமயத்தில் ஊற வைத்திருக்கும் புளியை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 சேர்த்து மீண்டும் இதை அரைக்க வேண்டும்.
நிறைய தண்ணீர் ஊற்றாமல் தான் துவையிலை அரைக்க வேண்டும். புளி ஊறவைத்த மூன்று டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை மட்டும் இதில் ஊற்றினால் போதும். துவையல் போல திக்காக இது வர வேண்டும். இப்போது நமக்கு அரைபட்ட கருவாப்பிலை துவையல் இருக்கிறது. அது மிக்சி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.
மீண்டும் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் துவையிலை அந்த சுடு எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் நன்றாக பிரட்டி விட்டு அதன் பின்பு அடுப்பை அணைத்து இதை நன்றாக சூடு ஆறிய பின்பு ஒரு காற்று புகாதா சில்வர் டப்பாவில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். சுட சுட ஒரு குண்டான் சாப்பாட்டுக்கு இந்த துவையல் போதும். உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம். தொடர்ந்து 30 நாட்கள் இந்த துவையிலை சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து உடலில் அதிகரிக்கும். தலைமுடி உதிர்வு குறையும். குறிப்பாக நரைமுடி வராமல் இருக்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம்.