மோதகப் பிரியராக விளங்கும் விநாயகருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து நாளை படைப்பது முறையாகும். அந்த வகையில் விநாயகருக்கு பிடித்த அவல் கொண்டு செய்யப்படும் இந்த கொழுக்கட்டை ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. அவலால் செய்யப்படும் இந்த மிருதுவான கொழுக்கட்டை இது இந்த முறையில் நீங்கள் செய்து பார்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான முறையில் அவல் கொழுக்கட்டையை எப்படி தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அவல் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் – 2 ஸ்பூன், கெட்டியான வெள்ளை அவல் – 1 கப், நாட்டு சர்க்கரை – 3/4 கப், நெய் – 2 ஸ்பூன், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப்,
அவல் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
அவல் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் கெட்டியான வெள்ளை அவல் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த அவலை நன்கு சுத்தம் செய்து வாணலியில் இட்டு லேசாக 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். மொறு மொறுவென பொரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வையுங்கள்.
பின்னர் அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை எள் சேர்த்து படபடவென பொரிய பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கப்பில் முக்கால் கப் அளவிற்கு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்து கொதித்து வந்ததும் அதை ஒரு வடிகட்டியில் இட்டு நன்கு குப்பைகள் எல்லாம் நீங்க வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வடித்து எடுத்த இந்த கலவையை மீண்டும் அந்த வாணலியில் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது ரெண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனால் கொழுக்கட்டை நல்ல வாசனையாக இருக்கும். நெய்க்கு பதிலாக உங்களிடம் வெண்ணெய் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள், இன்னும் சூப்பர் சாப்ட் ஆக வரும். நெய் கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நீங்கள் அரைத்து வைத்துள்ள அவல் பொடியை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து கிண்டி விட வேண்டும். ஒரே நிமிடத்தில் தண்ணீரை எல்லாம் உரிந்து நன்கு திரண்டு வரும். அப்போது கரண்டியை வைத்து நன்கு அழுத்தம் கொடுத்து விடுங்கள். கொழுக்கட்டை மாவு தயார் ஆனதும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவுடன் வாசனைக்கு அரை ஸ்பூன் அளவிற்கு பொடித்த ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காய் தூள் சேர்த்ததும் வறுத்து வைத்துள்ள வெள்ளை எள்ளையும் சேர்த்துக் கலந்து விடுங்கள். பின்னர் பூ போல துருவி எடுத்த பிரஷ் ஆன தேங்காய் துருவல் கால் கப் அளவிற்கு சேர்த்து கைகளை வைத்து மாவை நன்கு பிசைந்து கொடுங்கள். எல்லா கலவையும் ஒன்றுடன் ஒன்றாக சேர்ந்த பின்பு பிடி கொழுக்கட்டை பிடிப்பது போல நன்கு உருண்டையாக எடுத்து விரல் வைத்து அழுத்தி கொழுக்கட்டை பிடித்து வையுங்கள். இதை ஆவியில் ஐந்து நிமிடம் இட்லி தட்டின் மீது வாழை இலை விரித்து வைத்து அவித்து எடுத்தால் ரொம்ப ரொம்ப சாஃப்ட்டான டேஸ்டியான விநாயகருக்கு பிடித்த அவல் கொழுக்கட்டை தயார்! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!