ஒவ்வொரு காய்கறிகளையும் பார்த்து பார்த்து வாங்குவதை விட அந்த காய்கறிகளை பாதுகாப்பது பெரிய கஷ்டம் தான். வாங்கும் போது என்னவோ பார்க்கவே பச்சைப்பசேல் என்று தான் இருக்கும். வாங்கி வைத்தால் ஒரு வாரம் டென்ஷன் இல்லாம வேலையை பார்க்கலாம் அப்படின்னு நினைச்சா, வாங்கிட்டு வந்த அடுத்த நாளே வாடி வதங்கி குப்பையில் போடும் அளவுக்கு மாறிவிடும். இதனால் பணமும் செலவு, நமக்கு டென்ஷனும் அதிகமாயிடும். இப்படி டென்ஷன் ஆகாம நீங்க வாங்கி வந்த காய்கறிகளை ஒரு வாரம் வச்சிருக்கலாம். ஏன் இன்னும் ஒரு வாரம் கூடவே வச்சிக்கிற அளவுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கு. அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காய்கறிகள் வாங்கி வந்து என்ன தான் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இரண்டு மூன்று நாட்களிலே அதன் பசுமை நிறம் மாறிவிடும். அப்படி ஆகாமல் இருக்க வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளும், உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வந்த காய்கறிகளை போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு எடுத்து ஒரு காட்டன் துணியில் ஈரம் இல்லாமல் துடைத்து, வைத்து பாருங்கள். ஒரு வாரம் ஆனாலும் நீங்கள் புதிதாக வாங்கி வந்தது போலவே இருக்கும்.
வாழைப்பழம் வாங்கி வரும் போது மட்டுமே அது நன்றாக இருக்கும். அடுத்த நாளே தோல் கறுத்து விடும். அதற்கு அடுத்த நாள் பழம் முற்றிலும் அழுகிவிடும் சாப்பிடவே முடியாது. இது போன்று கறுக்காமல் இருக்க வாழைப்பழம் வாங்கி வந்தவுடன் அதன் காம்பு பகுதியில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து நன்றாக சுற்றி வைத்து விடுங்கள். ஒரு வாரமானாலும் பழம் நீங்கள் புதிதாக வாங்கி வந்து வைத்தது போலவே இருக்கும்.
அதே போல் தக்காளியை வாங்கி வந்த உடன் அப்படியே கொட்டி விடாமல் தக்காளியின் மேல் பாகம் காம்பு பகுதியில் லேசாக ஒரு சொட்டு நெய் தடவி, நெய் தடவிய பாகம் அடியில் படும் படி தலைகீழே திருப்பி அடுக்கி வைத்து விட்டால் போதும். இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை வெளியில் வைத்தாலே ஒரு வாரம் வரையில் தக்காளி நீங்கள் புதிதாக வாங்கி வந்தது போலவே இருக்கும்.
அதே போல் உருளைக்கிழங்கை எப்போதும் தனியாகத்தான் வைக்க வேண்டும். அதை வெங்காயம் பூண்டு இது போன்ற பொருட்களுடன் வைக்கும் போது அதன் மேலே சீக்கிரம் முளைத்து கிழங்கின் ருசியும் மாறிவிடும். கடைகளில் இருந்து தேங்காய் வாங்கி வந்த பிறகு அதை சாய்த்து வைக்க கூடாது. தேங்காயின் குடுமி பக்கம் மேல் நோக்கி சாய்க்காமல் நேராக வைத்தால் நீண்ட நாட்கள் தேங்காய் அழுகாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: வெள்ளிப் பொருட்களை வீட்டிலேயே பாலிஷ் போட இப்படி ஒரு புது ஐடியா இருக்குதா? இந்த பொருளை வைத்து வெள்ளி பொருளை எப்படி புதுசாக மாற்றுவது?
பூண்டு வாங்கி வந்த பிறகு பல் பல்லாக பிரித்து காய வைத்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு பூண்டு சொத்தையாகாமல் இருக்கும். இதே போல தான் சின்ன வெங்காயமும் தனியாக பிரித்து காய வைத்தால் நீண்ட நாட்கள் வெங்காயம் அழுகாமல் இருக்கும். இதை போல சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டாலே போதும். சமையல் வேலையை டென்ஷன் இல்லாமல் செய்து விடலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் மிகவும் உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.