அல்வாவில் பல வகைகள் உண்டு கோதுமை அல்வா, பாசிப்பருப்பு அல்வா பூசணிக்காய் அல்வா, பிரட் அல்வா, இப்படி நாம் அன்றாடம் வீட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து விதவிதமாக அல்வா செய்யலாம். அதே போல் தேங்காய் பால் எடுத்தும் அல்வா செய்யலாம் தெரியுமா ? இது அவ்வளவு சுவையாக இருக்கும் இது உடலுக்கும், வயிற்று புண், வாய் புண் போன்ற வைகளுக்கும் தேங்காய் பால் மிகவும் நல்லது. இந்த பாலை வைத்து சுவையாக செய்யக்கூடிய ஒரு அருமையான இந்த தேங்காய் பால் அல்வாவை தான் எப்படி நாம் வீட்டில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: மைதா -250 கிராம், தேங்காய் – 1, சர்க்கரை – 300 கிராம், தேங்காய் எண்ணெய் -150 மில்லி, பாதாம் – 50 கிராம்.
தேங்காய் பால் அல்வா செய்வதற்கு முதலில் மைதாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதை அப்படியே ஒரு பவுலில் வைத்து மாவு நன்றாக மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். இது குறைந்தது ஆறு அல்லது ஏழு மணி நேரம் இந்த மாவு அந்த தண்ணீரிலே ஊற வேண்டும்.
ஆறு மணி நேரம் கழித்து எடுத்து மாவை ஐந்து விரல் கொண்டு லேசாக பிசைந்து விடவும் மாவை உடைத்து விடக்கூடாது. லேசாக அப்படியே பிசைந்து கொண்டே இருந்தால் அந்த மாவில் இருந்து வெள்ளையாக பால் போல் வரும். இப்படி நீங்கள் தொடர்ந்து ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை மாவை பிசையும் போது மாவில் உள்ள பால் அனைத்தும் இறங்கி கடைசியாக மாவு ஜவ்வு போன்று மாறும். அதன் பிறகு அதை தூர எடுத்து போட்டு விடுங்கள். இப்போது இந்த கரைத்த மாவை வடிக்கட்டினால் தேங்காய் பால் போல் தண்ணீர் வரும். (இதை பிசையும் போது மிகவும் கவனம் மாவை உடைத்து விடக்கூடாது மாவை உருட்டி வைத்த அந்த உருண்டை பதம் அப்படியே இருக்க வேண்டும்) லேசாக நீங்கள் அதை பிசைந்து விட்டால் போதும் அதிலிருந்து பால் போல வரும்.
இப்போது வடிகட்டி வைத்த இந்த தண்ணீரையும் ஒரு ஐந்து மணி நேரம் வரை எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விடுங்கள். ஐந்து மணி நேரம் கழித்து இந்த பாலின் கட்டியான மாவு அடியில் தங்கி மேலே வெறும் தண்ணீர் மட்டும் இருக்கும் அந்த தண்ணீர் அனைத்தையும் எடுத்தகீழே ஊற்றி விடுங்கள்.
இப்போது எடுத்து வைத்திருக்கும் அந்த மைதா மாவு பாலில் ஒரு முழு தேங்காய் அரைத்து திக்காக பாலாக எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் திக்காக அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது பால் மூன்றாவது பால் எல்லாம் வேண்டாம். அதையும் இந்த மைதா பாலுடன் ஒன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கனமான கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைக்க வேண்டாம் கடாயை மட்டும் வைத்து அதில் இந்த இரண்டு பாலையும் சேர்த்து எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து விடுங்கள்.
சர்க்கரை பாலில் நன்றாக கரைந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் இதை கிளறிக் கொண்டே இருங்கள். கட்டிகள் சேராமல் நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். எடுத்து வைத்திருக்க தேங்காய் எண்ணெய்யை முழுவதுமாக ஊற்றி விடாமல் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே இருங்கள்.
ஒரு பதினைந்து நிமிடம் வரை இப்படி கலந்த பிறகு மாவு பால் எல்லாம் நன்றாக சுருண்டு வந்து விடும். பிறகு எடுத்து வைத்த பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி அல்வா கையில் ஒட்டாத அளவு வந்தவுடன் எடுத்து ஒரு பிளேட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் இந்த அல்வாவை மாற்றி வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: வீட்டில் ரவையும் சர்க்கரையும் இருந்தால் போதுமே. சூப்பரான இந்த அப்பம் 5 நிமிடத்தில் தயார்.
ஒரு பத்து நிமிடம் கழித்து லேசான சூட்டில் இருக்கும்போது உங்களுக்கு தேவையான வடிவில் அல்வாவை வெட்டிக் கொள்ளுங்கள். சுவையான தேங்காய் பால் அல்வா ரெடி.