இட்லி, தோசைக்கு சதா ஒரே மாதிரியான சட்னி செய்து போர் அடித்து போனவர்கள், இது போல சூப்பரான, சுவையான பூண்டு தக்காளி கார சட்னி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, ரொம்பவே குறைவான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இந்த சட்னி சுவையில் அசத்தலாக இருக்கும். நாவிற்கு உரைப்பாகவும், தக்காளியின் புளிப்பாகவும் எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் பொருந்தக்கூடிய இந்த அட்டகாசமான கார சட்னி எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.
பூண்டு தக்காளி கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – ஒரு கைப்பிடி, பெரிய தக்காளி – ஒன்று, வரமிளகாய் – 10, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
பூண்டு தக்காளி கார சட்னி செய்முறை விளக்கம்:
இந்த சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய பூண்டு பற்களை முழுவதுமாக உரித்து தோல் உரித்து வைத்தால் போதும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு பெரிய சைஸ் பழுத்த தக்காளி ஒன்றை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து நான்கு ஐந்து துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் காரத்திற்கு 10 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வரமிளகாய் எவ்வளவு காரம் கொடுக்கும் என்பது உங்களுக்கு தான் தெரியும் எனவே அதற்கு ஏற்ப நீங்கள் கூட குறைத்துக் கொள்ளலாம். இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டு வரும் பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை சுத்தம் செய்து உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பேக்கரியில் வாங்காமல் ஹெல்தியான ஸ்நாக்ஸ் ஈசியாக எப்படி குழந்தைகளுக்காக நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்? இப்படி ஒருமுறை செஞ்சு வச்சுகிட்டா தேவைப்படுறப்போ சாப்பிடலாமே!
கருவேப்பிலை லேசாக வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு இடைவிடாமல் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு நன்கு கலந்து விட வேண்டும். அடுப்பைக் கூட்டினால் தெறிக்க ஆரம்பிக்கும் எனவே கவனமாக இருப்பது நல்லது. சட்னி நன்கு வற்றி எண்ணெய் தெளிந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டியது தான். ரொம்ப சூப்பராக பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த தக்காளி பூண்டு கார சட்னி ரெசிபி இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு அருமையாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.