பீர்க்கங்காயில் அதிக பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது பார்வை சார்ந்த எந்த விதமான பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. மேலும் நம்முடைய ரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க கூடிய அற்புத மருந்தாகவும் செயல்படுகிறது. மேலும் பீர்க்கங்காயில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நமக்கு வாரம் ஒரு முறையாவது கிடைப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சுவையான பீர்கங்காய் சாம்பார் ரெசிபியை அஞ்சே நிமிஷத்துல எப்படி வைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பீர்க்கங்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 2, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, துவரம் பருப்பு – 150 கிராம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
பீர்க்கங்காய் சாம்பார் செய்முறை விளக்கம்:
சுவையான பீர்க்கங்காய் சாம்பார் செய்வதற்கு முதலில் இரண்டு பீர்க்கங்காயை தோல் மற்றும் விதைகள் நீக்கி சற்று பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சாம்பாரில் கொதிக்கும் பொழுது சுருண்டு விடும் என்பதால் சிறிதாக வெட்ட வேண்டாம். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளுங்கள். 100 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
துவரம் பருப்பு நன்கு ஊறியதும் குக்கரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரின் விசிலை மூடி குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூடியை திறந்து தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் சின்ன வெங்காயம் இல்லை என்றால் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்க்கலாம்.
பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சாம்பார் தூள் மற்றும் குழம்புக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். சாம்பார் நன்கு கொதித்து வரும் சமயத்தில் தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து, சீரகம் தாளித்து ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
அனைவரும் விரும்பும் ‘பாம்பே கராச்சி அல்வா’ இனி கடையில் வாங்க வேண்டாம்! 1 கப் கான்பிளவர் மாவு இருந்தாலே போதும் சட்டுனு செஞ்சிடலாம்.
வெங்காயம் நறுக்கும் பொழுதே கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தாளிக்கும் பொழுது வெங்காயம் சேர்த்து தாளித்தால் ரொம்பவே அருமையான வாசமும், சுவையும் இருக்கும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வறுபட வேண்டும். பின் தாளித்தவற்றை சாம்பாரில் கொட்டி நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பாரை நீங்கள் சாதம் மட்டும் அல்லாமல் டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கும், நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.