‘ஆடி மாத தேங்காய் பால் பிரசாதம்’ அம்மனுக்கு நாளை ஆடிப்பெருக்கு அன்று வீட்டிலேயே செய்து படைப்பது எப்படி?

aadi-paal-amman
- Advertisement -

ஆடி மாதம் அன்று மட்டும் அல்லாமல் ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் அம்மனுக்கு படைக்கக் கூடிய அற்புதமான ஒரு பிரசாதம் தான் இந்த ‘தேங்காய் பால்’. இதை நம் கைகளால் நம் வீட்டிலேயே அம்மனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் நமக்கு சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நியதி. புதுமண தம்பதிகளுக்கு இதனை வீட்டில் செய்து கொடுப்பது விசேஷமாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி மாத அற்புத பலன்களை அனுபவித்து அம்மனுக்கு தேங்காய் பாலை இப்படி செய்து படையுங்கள்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

‘ஆடி அம்மன் தேங்காய் பால்’ செய்ய தேவையான பொருட்கள்:
முழு தேங்காய் – ஒன்று, பாசி பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – நான்கு, பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி – பதினைந்து.

- Advertisement -

‘ஆடி அம்மன் தேங்காய் பால்’ செய்முறை விளக்கம்:
முழு தேங்காய் ஒன்றை அதிகம் முத்தி போகாமல் இளசாக இல்லாமல் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உடைக்கும் பொழுது ‘ஓம் பராசக்தி’ என்கிற மந்திரத்தை உச்சரித்து உடையுங்கள். உடைக்கும் இந்த தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ஒரு டம்ளரில் பிடித்து அதை அம்மனுக்கு வையுங்கள். பின்னர் அதை ஓட்டில் இருந்து நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

aadi-paal

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். வாணலி சூடானதும் ஒன்றரை டீஸ்பூன் பாசிப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து பொன்னிறமாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் சூடு ஆறியதும் ஒரு முறை கழுவி மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் 4 ஏலக்காய்கள் மற்றும் சுக்கு ஒரு துண்டு கொஞ்சமாக சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பாலை வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுங்கள். இதே போல 3 முறை செய்து மீதமிருக்கும் சக்கையை தூக்கி போட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது வெல்லத்தை பொடித்து அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள். உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். வெல்லத்தை எப்பொழுதும் பாகு காய்ச்சாமல் நாம் பயன்படுத்தினால் அதில் இருக்கும் சிறு சிறு இரும்பு துண்டுகள் அல்லது ஓடுகள் நம் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொண்டு எந்த ஒரு பலகாரத்தையும் செய்வது நல்லது.

aadi-paal1

இப்போது தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து லேசாக சுட வையுங்கள். அதனுடன் காய்ச்சிய பாகை ஊற்றி லேசாக நுரை வரும் வரை காத்திருங்கள்! நுரை வந்து பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். தாளிப்பு கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அதில் பொடித்த முந்திரியை சேர்த்து வறுத்து தேங்காய் பாலுடன் சேர்த்து ஊற்றிக் கொள்ளுங்கள். தேங்காய் பால் ஆறி வரும் பொழுது கெட்டியாகிவிடும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சுட சுட இந்த நைவேத்தியத்தை அம்மனுக்கு பிரசாதமாக வைத்து ஆடிப் பெருக்கை கொண்டாடினால் வாழ்வில் வளம் பெறலாம். வேண்டிய வரம் எல்லாம் கிடைத்து அம்மனுடைய அருளை பரிபூரணமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -