ஆரோக்கியமான முருங்கைக்கீரை பூண்டு குழம்பு செய்முறை

murungaikeerai poondu kulambu
- Advertisement -

குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவிகள் தங்களால் இயன்ற அளவு ஆரோக்கியமான பொருட்களை உணவில் சேர்த்து குடும்பத்தாருக்கு தர நினைப்பார்கள். அப்படி கொடுத்தாலும் அதை பலரும் உண்ணாமல் தவிர்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. அப்படி இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே சில ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து தருவதன் மூலம் அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி அந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் ஆரோக்கியமான முருங்கைக் கீரையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பு வகையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக கீரை வகைகளையே அதிகமான நபர்கள் சாப்பிட விரும்ப மாட்டார்கள். இந்த கீரை வகைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தான் முருங்கைக் கீரையும், கருவேப்பிலையும். கருவேப்பிலையை அனைத்து சமையலில் நாம் சேர்த்தாலும் அதை தனியாக எடுத்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. முருங்கைக்கீரையும் கருவேப்பிலையும் நாம் அன்றாடம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகும் அதிகரிக்கும் என்று அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதை உண்பதில் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குரிய ஒரு எளிமையான குழம்பு வகையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு
  • கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  • பூண்டு – 25 பல்
  • சின்ன வெங்காயம் – 150 கிராம்
  • காய்ந்த மிளகாய் – 4
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி – 2
  • புளி – எலுமிச்சம் பழ அளவு
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருங்கைக்கீரையும் கருவேப்பிலையும் சுத்தம் செய்து அதை தண்ணீர் வடிய எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பின் ஒரு கடாயை வைத்து அந்த கடாயில் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கருவேப்பிலை நன்றாக வறுபட்ட பிறகு அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து தண்ணீர் சக்தி இல்லாத அளவிற்கு இரண்டு முறை பிரட்டி விட்டு அதை எடுத்து தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நல்லெண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் இவற்றை சேர்க்க வேண்டும். கடலை பருப்பு சிவந்ததும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து அது வதங்கும் அளவிற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை சூடு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயமும் பூண்டும் வதங்கிய பிறகு அதில் தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு ஆட்டி அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் அளவு வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் முருங்கை கீரை விழுதை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்பொழுது குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வேக விட வேண்டும். எண்ணெய் பிரிந்த பிறகு ஊற வைத்த புளியை கரைத்து புளித்தண்ணீரை அதில் ஊற்றி குழம்பு மிளகாய் தூளையும் அதில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க விட வேண்டும். புளியின் பச்சை வாடை நன்றாக போன பிறகு இது கெட்டியான ஒரு தொக்கு பதத்திற்கு வரும்.

- Advertisement -

இந்த தொக்கை நன்றாக ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம் நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்துடன் கலந்து சாப்பிட்டு கொள்ளலாம். மிகவும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை கருவேப்பிலை பூண்டு குழம்பு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: தேங்காய் பால் ரசம் செய்முறை

முருங்கைக்கீரை, கருவேப்பிலையால் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் முழுமையாக கிடைப்பதற்கு இந்த முறையில் குழம்பு வைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தரலாம்.

- Advertisement -