ஆடி மாதம் என்றாலே அது சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சக்தி மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. சாதாரண செவ்வாய்க்கிழமையை விட ஆடிச் செவ்வாய் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஆடிச் செவ்வாய்க்கிழமை சிவபெருமானுக்குரிய பிரதோஷமும் சேர்ந்து வரும்பொழுது இதற்கு இன்னும் அதீத சக்தி இருக்கும். இப்படிப்பட்ட அதீத சக்தி மிகுந்த நாளான ஜூலை 22ஆம் தேதி நாம் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்யும் பொழுது நம்மை தேடி அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருக வழிபாட்டை மேற்கொள்வது துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்வது என்பது பலரும் கடைபிடிக்கக்கூடிய ஒரு வழிப்பாடாகவே இருக்கிறது. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் அற்புத சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. செவ்வாய் பகவானுக்குரிய கிழமையில் அம்மனையும் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் நம் ஒரு சேர வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான அற்புதங்கள் நிகழும்.
ஜூலை மாதம் 22 ஆம் தேதி காலை சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் தங்கள் வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டத்தை அனுபவிக்கிறோம் என்பவர்களும் அன்றைய நாளில் விரதம் இருந்து இந்த வழிபாட்டை செய்யும் பொழுது விரைவிலேயே அவர்களுடைய கஷ்டங்கள் தீரும். விரதம் இருக்க இயலாது என்பவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு வீட்டு பூஜை அறையில் 5 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு கீழ் வாசனை மிகுந்த மலர்களை பரப்பிக் கொள்ளலாம் அல்லது அரச இலையை வைத்தும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானை முழுமனதோடு வணங்கி “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 21 முறை கூறலாம். பிறகு அந்த ஐந்து அகல் விளக்கிற்கும் தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.
அடுத்ததாக “ஓம் சிவாய போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். மறுபடியும் தூபதீபம் காட்ட வேண்டும். அடுத்ததாக “ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 21 முறை கூறி தூபதீபம் காட்ட வேண்டும். கடைசியாக “ஓம் கந்தா போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 21 முறை கூறி தூபதீபம் காட்ட வேண்டும். பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி நிலை வாசலுக்கு தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். வீட்டில் லிங்கம் வைத்து வழிபாடு செய்பவர்கள் பிரதோஷ நேரத்தில் பன்னீர் அபிஷேகம் செய்யும் பொழுது சிவபெருமானின் மனம் குளிர்ந்து நம்முடைய கஷ்டங்களும் கரைந்து போகும்.
இதையும் படிக்கலாமே: நோய் நொடிகளில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்
எளிமையான இந்த ஆடி செவ்வாய் வழிபாட்டை முழு மனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.