சகல வளங்களையும், மாங்கல்ய பலத்தையும் பெருக்கித் தரும் ஆடிப்பெருக்கு நாளை (3/8/2021) எப்படி முறையாக வீட்டிலேயே எளிமையாக கொண்டாடுவது?

- Advertisement -

நாளை பிலவ வருடம் செவ்வாய்க் கிழமையில் பதினெட்டாம் பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. ஆடி மாதம் 18-ஆம் நாள் வந்து விட்டாலே தமிழர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆடிப்பெருக்கை வரவேற்கும் நிலையில் நாடு இல்லை. ஆடிப்பெருக்கு அன்று செய்யும் எந்த ஒரு காரியமும் பன்மடங்கு பெருகும் என்பது நியதி. எனவே இந்த நாளில் எதை செய்தால் பெருகும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கு சிறப்புகளும்! அதன் பலன்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mangalyam1

மாங்கல்ய பலத்தை நிலைக்க செய்யும் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நாளை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீட்டில் வழிபடுவது மிகவும் விசேஷம். கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்து விட்டு வருவதும் வீட்டில் சுபீட்சத்தை நிலைநாட்ட செய்யும். அதிகாலையிலேயே எழுந்து நீராடி வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறை அலங்காரங்கள் முடிந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைக்க தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காப்பரிசி, தேங்காய் பால், சர்க்கரை பொங்கல், சித்தரன்னம் எனப்படும் கலவை சாதங்கள் ஆகியவற்றை மங்கலப் பொருட்களுடன் சேர்த்து நிவேதனம் வைப்பது முறையாகும்.

- Advertisement -

தலை வாழை இலை விரித்து அதில் மங்கலப் பொருட்கள் ஆக இருக்கும் தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து பழ வகைகளை படைக்க வேண்டும். நாவல் பழம் போன்ற இனிப்புள்ள பழங்களை படைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு. மேலும் அந்நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் பன்மடங்கு பெருகுவதாக ஐதீகம் உண்டு. இவற்றை வாங்க முடியாதவர்கள் அதற்கு இணையாக இருக்கும் வறுமையைப் போக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள அரிசி, துவரம் பருப்பு, மஞ்சள், சர்க்கரை, கல்லுப்பு ஆகிய முக்கிய பொருட்களை புதிதாக வாங்கி வைத்து வழிபடலாம்.

aadi-peruku1

எந்த பொருளை இந்த நாளில் புதிதாக வாங்கினாலும் அது மேலும் மேலும் நீங்கள் வாங்க கூடிய யோகம் பெருகி வரும் என்பதைக் குறிப்பது தான் ஆடிப்பெருக்கு. விவசாயிகள் இந்த நாளில் புதிதாக விதை நடவு செய்வது வழக்கம். அப்போது தான் தை மாதத்தில்
பயிறை அறுவடை செய்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும். அதற்கு முக்கிய நாளான இன்று தமிழர்களுக்கு விசேஷமானதாக இருந்து வருகிறது. காவிரி தாயின் மடியில் குடும்பத்துடன் சென்று நீராடி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து குடும்ப நன்மைக்காகவும், வியாபாரம், தொழில் செழிப்புடன் இருக்கவும் வணங்கி வழிபடுவது வழக்கம்.

- Advertisement -

பூஜைகள் செய்து காவிரி தாய்க்கு பிரசாதமாக புது பட்டு உடையை மங்கலப் பொருட்களுடன் சேர்த்து, மாங்கல்ய கயிறு ஒன்றையும் வைத்து ஆற்றில் விடுவார்கள். இதனை மனமுவந்து தாய் வீட்டு சீதனமாக காவிரித்தாய் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உண்டு. ஆனால் இப்போது ஆறு, குளம் எல்லாம் வற்றி போயிருக்கும் நிலையில் வீட்டிலேயே எளிமையாக கிணறு இருந்தால் கிணற்றுக்கு பக்கத்தில் செய்யலாம் அல்லது காவிரி தாயாக பாவித்து பித்தளை அல்லது செம்பு கலசம் ஒன்றில் தண்ணீரை வைத்து அதில் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள், துளசி இலைகள், ஏலக்காய் சேர்த்து தீர்த்தம் வைக்க வேண்டும்.

aadi-peruku

எல்லாவற்றையும் தயார் செய்து வைத்த பின் ஐந்து முக குத்து விளக்கில் நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இலையில் அகல் விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றுங்கள். தாலி சரடு மாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் நல்ல நேரம் பார்த்து அன்றைய நாளில் தாலி சரடை மாற்றிக் கொள்வது வழக்கம். அப்படி அல்லாதவர்கள் மஞ்சள் கயிறை கட்டிக் கொண்டு மாங்கல்ய பலம் நிலைக்க தங்கள் தங்க சரட்டை அந்த இலையில் வைத்து தீர்த்தம் தெளித்து பூஜை முடிந்த பின் அணிந்து கொள்வார்கள். பூஜைகள் முடிந்த உடன் குடும்பத்துடன் அமர்ந்து நைவேத்தியங்கள், காப்பரிசி, ஆடிப் பால் ஆகியவற்றை பகிர்ந்து உண்ணக் கொடுக்க வேண்டும். இந்நாளில் அம்பாளுக்கு உரிய மந்திரங்கள் வாசிப்பது அல்லது ஒலிக்க விடுவது மிகவும் முக்கியம். ஆடி பதினெட்டாம் பெருக்கு வீட்டிலேயே எளிமையாக இப்படி முறையாக கொண்டாடி அனைவரும் பலன் பெறலாமே!

- Advertisement -