வெள்ளிக்கிழமை என்றாலே அது சிறப்புக்குரியது தான். மகாலட்சுமிக்கும் சுக்கிர பகவானுக்கும் உரியதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்கு ஏற்றவாறு பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால் இந்த தினம் மிகவும் சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த தினத்தில் செய்யக்கூடிய பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானுக்குரிய அதி தேவதையாக கருதப்படுபவள் மகாலட்சுமி தாயார். எந்த நாட்களில் நாம் பூஜை செய்கிறோமோ இல்லையோ வெள்ளிக்கிழமையில் பூஜை செய்தோம் என்றால் சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும். அதனால் செல்வ வளம் பெருகும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி திதி என்பது இன்னும் பல அற்புதமான பலன்களை தரக்கூடியதாக திகழ்கிறது.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். இதற்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் முதலில் ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்த கோலத்திற்கு நடுவே மஞ்சளை வைத்து அதற்கு மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோலத்திற்கு மேலாக சுத்தம் செய்யப்பட்ட ஒரு குத்துவிளக்கை எடுத்துவைத்து அந்த குத்துவிளக்கு சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த குத்துவிளக்கை மல்லிகை பூவை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நெய் ஊற்றி ஐந்து முகத்திற்கும் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும் பொழுது “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை கூறியவாறு ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். அடுத்ததாக மஞ்சளில் சிறிது ஜவ்வாதை சேர்த்து பன்னீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து பிள்ளையாரை அந்த விளக்கத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அதற்கு மேல் வைக்க வேண்டும். பிறகு பிள்ளையாருக்கு மலர்களை சாற்றி விட்டு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு விநாயகர் மந்திரத்தை கூறி அவருக்கு அருகம்புலால் அர்ச்சனை செய்து அவரை மனதார வழிபட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளையோ அல்லது “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் மந்திரத்தையோ 108 முறை கூறி அந்த விளக்கிற்கு மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி இந்த பூஜையை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் பெருகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமியில் மகாலட்சுமி வழிபாடு
விசேஷகரமான நாளாக திகழக்கூடிய பௌர்ணமி திதியோடு சேர்ந்து வரக்கூடிய ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையை நாம் இந்த முறையில் பயன்படுத்தி பூஜை செய்து நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வோம். நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் செய்து பலன் அடையுங்கள்.