கோவில்களில் பிரசாத கடைகளில் விற்கப்படும் பிரசாதங்கள் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறதா? இல்லையா?

பிரசித்தி பெற்ற கோவில்களில் பிரசாத கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதை பெரும்பாலான கோவில்களில் நாம் பார்த்திருப்போம் மேலும் அவற்றை வாங்கி பிரசாதமாக நினைத்து நாம் உண்ணவும் செய்திருப்போம் ஆனால் பிரசாத கடைகளில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் உண்மையில் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின் விற்பனை செய்யப்படுகிறதா? இல்லையா? பிரசாத கடையில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் எதற்காக விற்பனை செய்யப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

prasatham

கோவில்களில் விற்கப்படும் பிரசாதங்கள் விதவிதமாக செய்யப்பட்டு இருக்கும். புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், ஓட்டை வடை, லட்டு, அல்வா, பஞ்சாமிர்தம் என்று அந்த கோவில்களுக்கு உரிய கடவுள்களின் விருப்பமான உணவுகளை தயாரித்து விற்பனைக்கு விநியோகிக்கப்படும். இதனை அந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்கு செய்யப்பட்ட நைவேத்தியம் என்று பவ்யமாக வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு கொண்டு சென்று அக்கம் பக்கத்தினரிடம் பகிர்ந்தும் உண்ண செய்வார்கள்.

பிரசித்தி பெற்ற எந்த கோவில்களுக்கு நாம் செல்லும் பொழுதும் கட்டாயம் மறக்காமல் பிரசாதங்களை வாங்கி வந்து விடுவது உண்டு. வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு பூஜையிலும் நைவேத்தியம் இல்லாமல் பூஜை செய்வது கூடாது. சாதாரணமாக நீங்கள் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுதும் எதாவது நைவேத்தியம் இல்லாமல் பூஜை செய்யக்கூடாது என்பது நியதி.

prasatham1

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் பூஜை செய்தாலும் கூட ஏதாவது ஒரு பொருளை கடவுளுக்கு படைத்து பூஜை செய்வது நலமாகும். பூஜையின் முழுமையான பலனைப் பெற நைவேத்யம் படைப்பது என்பது அவசியமாக பங்கு கொள்கிறது. சாதாரண பூஜைகளில் உங்களால் நைவேத்தியம் வைக்க முடியாவிட்டாலும் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருளையாவது கட்டாயம் வைக்க வேண்டும்.

பேரிச்சம்பழம், பால், தயிர், வெல்லம், வெண்ணெய், பழங்கள், தானியங்கள், அரிசி, கல்கண்டு, சர்க்கரை, உடைத்த கடலை, முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இவற்றில் எதையாவது வைத்து உடன் தீர்த்தமும் வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போடுவது அல்லது சாதாரண கற்பூரத்தை நொறுக்கி போடுவது, துளசி போட்டுக் கொள்வது, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்த்து போடுவது போன்ற தெய்வீக பொருட்களை சேர்த்து தயார் செய்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு நைவேத்தியத்தை படைத்த பிறகு தான் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படி இருக்கும் பொழுது கோவில்களில் நைவேத்தியம் படைக்காமல் எதுவுமே செய்வதில்லை.

prasatham

கோவில்களில் பக்தர்களுக்கு விநியோகிக்க தயாரிக்கப்படும் அத்தனை பொருட்களும் மூலவர் சன்னிதிக்கு கொண்டு சென்று நைவேத்தியம் படைத்த பின்பு தான் கடைகளில் விற்பனைக்கு கொடுக்கப்படும். பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில்களில் விற்கப்படும் அத்தனை பிரசாதங்களும் இறைவனுக்கு நேரடியாக நைவேத்யம் செய்யப்படுகின்றன. அதன் பிறகு தான் பிரசாத கடைகளில் விற்பனைக்கு வரும். இதனால் அங்குள்ள எந்த கடைகளில் நீங்கள் பிரசாதம் வாங்கினாலும் அது இறைவனுக்கு படைக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களில் விற்கப்படும் பிரசாதங்கள் உண்மையில் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்க பின்பு தான் விற்பனைக்கு வருகின்றனவா? என்பது இந்து அறநிலைய துறை தான் கண்காணிக்க வேண்டும்.