இன்றைய காலத்தில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். அதிலும் மிக முக்கியமான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். அதிலும் குறிப்பாக நகையை அடமானம் வைத்து அதை திருப்ப முடியாமல் கஷ்டப்படுவது என்பது பலரும் அனுபவிக்க கூடிய ஒரு திகழ்கிறது. சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வைத்து நகைகளாக வாங்கி வீட்டில் இருக்கக் கூடிய பெண் குழந்தைகளுக்காக சேர்த்து வைத்துக் கொண்டு இருப்பவர்கள் திடீரென்று ஏதோ ஒரு சூழ்நிலையில் அவசரத்திற்காக பணம் தேவைப்படுகிறது என்னும் பட்சத்தில் அதை அடமானத்தில் வைப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அடமானத்தில் வைத்த நகையை திருப்ப முடியாமல் போய்விடும் அப்படிப்பட்டவர்கள் அடகு வைத்த நகையை திருப்புவதற்கு வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நகைகளை திருப்ப குண்டு மஞ்சள் பரிகாரம்
தங்க நகைக்கு அதிபதியாக திகழக்கூடியவர் குருபகவான். குரு பகவானின் அருள் இருந்தால்தான் தங்க நகைகளே சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் குரு பகவானுக்கு பொன்னன் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை என்பதால் தங்க நகை தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் வியாழக்கிழமை செய்யும்பொழுது அதற்கு முழுமையான பலன் கிடைக்கும். அந்த வகையில் அடகு வைத்த தங்க நகையை திருப்புவதற்கு வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு குண்டு மஞ்சள், மஞ்சள் நிற துணி வேண்டும். வியாழக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குரு ஹோரை வரும். இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் முதலில் மஞ்சள் துணியை விரித்து அதில் ஒரே ஒரு குண்டு மஞ்சளை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் நகையை அடமானத்தில் வைக்கும் பொழுது அவர்கள் நகை அடகு சீட்டு ஒன்றை தருவார்கள் அல்லவா? அந்த சீட்டையும் வைத்து மஞ்சள் துணியால் ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும். எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். முழுமனதோடு நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
அப்படி கூறி முடித்த பிறகு அந்த மூட்டையை பத்திரமாக உங்களுடைய வீட்டு பூஜை அறையிலோ அல்லது பீரோவிலோ வைத்து விட வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை வரும் பொழுது அதே நேரத்தில் அந்த மூட்டையை எடுத்து பிரித்து அதனுடன் மற்றும் ஒரு குண்டு மஞ்சளை வைத்து மூட்டையாக கட்டி அந்த மந்திரத்தை கூற வேண்டும். மூன்றாவது வாரமும் இதே போல் ஒரு குண்டு மஞ்சளை அதில் வைத்து மந்திரத்தை கூறி மூட்டையாக கட்டி வைக்க வேண்டும்.
மூன்று வாரங்கள் இப்படி தொடர்ச்சியாக செய்து முடித்த பிறகு ஏதாவது ஒரு நல்ல நாளாக பார்த்து இந்த குண்டு மஞ்சளை எடுத்து நன்றாக இடித்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் பொடியை பெண்கள் தங்களுடைய உள்ளங்கை உள்ளங்கால் முகம் போன்றவற்றிற்கு பூசி குளிக்க வேண்டும். அதேபோல் வீட்டை துடைக்கும் பொழுதும் இந்த மஞ்சள் தூளை கலந்து துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குருவின் அம்சம் வீட்டிற்கும், வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் வந்து சேரும் அதன் மூலம் விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகள் வீடு திரும்பும்.
மந்திரம்
“ஓம் சொர்ணஸ்ரஜே நமஹ”
இதையும் படிக்கலாமே: கல்வி தடை நீக்கும் எலுமிச்சம்பழம்
குரு பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு வியாழக்கிழமை தோறும் இந்த முறையில் பரிகாரம் செய்து அடமானத்தில் இருக்கும் தங்க நகையை திருப்பிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.