காட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

vikramathithan-1-1
- Advertisement -

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் முருங்கை மரத்தின் மீதிருந்த வேதாளத்தைக் கீழே இறக்கித், தன் முதுகில் சுமந்து நடந்து கொண்டிருந்த போது, தான் ஒரு கதையைக் கூறப்போவதாகவும், இறுதியில் அக்கதைக்கான சரியான தீர்வை விக்ரமாதித்தியன் சொல்ல வேண்டும் என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தது வேதாளம். அந்தக் கதை இது தான்.

vikramathithan

ஒருமுறைக் காட்டில் வசிக்கும் ஆதிவாசி ஆண்களும், பெண்களும் அக்காட்டிலுள்ள ஏரிக்கரையின் ஓரத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் “ஏரிகுள்ளிருந்து நீரின் மேல துள்ளி குதிக்கும் மீன்களை அம்பு எய்தி வீழ்த்தமுடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மற்ற சிலர் அது இயலாத காரியம் என்று மறுத்துப் பேசினர். அப்போது அக்கூட்டத்திலிருந்த, பிரதாப் என்ற ஆதிவாசி இளைஞனிடம் “நீலீ” எனும் இளம் பெண் சென்று, நீ அந்த துள்ளிக்குதிக்கும் மீன்களிலில் ஒன்றை அம்பு எய்தி வீழ்த்தினால் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்றால். நீலியை திருமணம் செய்ய ஆதிவாசி இளஞ்சர்கள் பலர் காத்திருக்கையில் அவள் பிரதாப்பிடம் இப்படி கூறியது அவனை உற்சாகப்படுத்தியது.

- Advertisement -

உடனே பிரதாப் தன் வில்லில் அம்பு ஏற்றி, ஏரியில் துள்ளிக் குதிக்கும் மீனொன்றைக் குறிபார்த்து அம்பை செலுத்தினான். ஆனால் அவனின் குறி தவறி, அம்பு மீனை தாக்காமல் சென்றது. அப்போது அதே கூட்டத்திலிருந்த வீரபாகு என்ற மற்றொரு ஆதிவாசி இளைஞன் துள்ளும் மீன்களைக் குறிபார்த்து அம்பு எய்தினான். அவன் எய்திய அம்பு ஒன்று ஒரு மீனைத் தாக்கி, அதைத் துளைத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ட வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பிறகு வீரபாகுவையும் தங்களோடு அழைத்துக் கொண்டு நேராக நீலியிடம் சென்று “சவால் விட்ட படி மீனை வீரபாகு வீழ்த்தியதால், நீலி வீரபாகுவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினர்.

forest

இதைக் கேட்ட நீலி “தான் அத்தகையச் சவாலை தனக்குப் பிடித்த பிரதாப்பிடம் மட்டுமே விடுத்ததாகவும், மற்ற யாருக்கும் இதைப் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை என்றும், அதனால் தன்னால் வீரபாகுவைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தாள்”. இதைக் கேட்ட வீரபாகு தான் எப்படியும் நீலியைத் திருமணம் செய்து கொள்வேன் என்று கோபமாகக் கூறிச் சென்றான். சில காலம் கழிந்தது.

- Advertisement -

பிறகு ஒரு சமயம் ஆதிவாசி மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வெட்டவெளியில் அமர்ந்து உணவருந்திக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர்.அப்போது திடீரென்று ஒரு புலி அக்கூட்டத்துக்குள் பாய்ந்தது. அதைக் கண்டு எல்லோரும் தங்களைக் காத்துக் கொள்ள அருகிலிருந்த குன்றின் உச்சியை நோக்கி ஓடினர்.அப்போது எல்லோரையும் விட பின்தங்கிருந்த நீலி கால் தடுக்கிக் கீழே விழ, அவள் மீது அந்தப் புலி பாய இருந்தது. இதைக் கண்ட வீரபாகு ஒரு பாறைக் கல்லை எடுத்து அந்த புலியின் மீது வீசினான். அதில் அடிபட்ட புலி கீழே விழுந்தது. ஆதிவாசிகளின் மரபுப்படி தங்களுக்குள் எப்படியான பகை இருந்தாலும் ஆபத்துக் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்பது எழுதப் படாத விதி. இதன் படி புலி கீழ விழுந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீலியை எழுப்பி, அவள் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் குன்றை நோக்கி வீரபாகுவும், நீலியும் ஓடினர். அடிபட்டு வீழ்த்திருந்த புலி மீண்டும் அவர்களை துரத்த ஆரம்பித்தது.

tiger

தப்பிக்க வேறுவழியில்லாமல் நீலியும், வீரபாகுவும் அக்குன்றிலிருந்து கீழே குதித்தனர். கீழே விழுந்ததில் நீலியின் கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் அவள் மயக்கமடைந்தாள். அவளின் மயக்கத்தை தெளிவிக்க அருகிலிருந்த குளத்திற்கு நீர் எடுக்க சென்ற வீரபாகுவிடம், இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வீரபாகுவின் நண்பன் ஒருவன் ” நமது ஆதிவாசிகளின் படி ஆணும், பெண்ணும் தங்களின் ரத்தத்தை ஒன்று கலந்து கொண்டால் திருமணம் ஆனதாக அர்த்தம், அதனால் நீயும் உன் ரத்தத்தை நீலியின் ரத்தத்துடன் கலந்து, அவளைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்” என்று கூறிச் சென்றான். இதைக் கேட்டு அப்படியே திகைத்து நின்றான் வீரபாகு.

- Advertisement -

village

இது நடந்து சில காலம் கழித்து வீரபாகு, நீலியைக் கட்டாய திருமணம் செய்து கொண்டான் என்று நீலி விரும்பிய பிரதாப் ஆதிவாசிகளின் கூட்டத்தில் வழக்குத் தொடுத்தான். இக்குற்றச்சாட்டை விசாரித்த ஆதிவாசி பெரியவர்கள், அக்குற்றச்சாட்டு உண்மைதானா என்று நீலியிடம் விசாரித்தனர், மேலும் இக்குற்றச்சாட்டு உண்மையாயிருக்கும் பட்சத்தில் வீரபாகு மரண தண்டனை பெறுவான் என்றும், பிறகு நீலி, தான் விரும்பிய பிரதாப்பையோ அல்லது வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினர். அதனால் நடந்த உண்மையை பஞ்சாயத்தில் கூறுமாறு நீலியை அப்பெரியோர்கள் வற்புறுத்தினர்.

அப்போது நீலி, “வீரபாகு எனது சம்மதத்துடன் தான் என்னைத் திருமணம் செய்து கொண்டார்” என்று கூறினாள். இதைகேட்டு அதிர்ந்த வீரபாகு, அப்பெரியவர்கள் முன்பு வந்து ” நீலி அடிபட்டிருந்த சமயம் எனது நண்பன் அறிவுறுத்தியது போல் எனது கையைக் கீறி ரத்தம் வரவழைத்துக் கொண்டு, நீலியின் ரத்தத்துடன் கலக்க அவளின் அருகே சென்றதாகவும், ஆனால் அவளின் முகத்தைப் பார்த்த போது அந்த தவறான செயலை செய்ய முடியாமல் விலகியதாகவும், அதனால் தான் நீலியைக் கட்டாயத் திருமணம் செய்யவில்லை” என்று உறுதியாகக் கூறினான். மேலும் தான் செய்த இக்காரியத்துக்கான தண்டனையாக தான் இந்தக் கூட்டத்தையும், இக்காட்டையும் விட்டு வெளியேறுவாதாக கூறி அங்கிருந்து வெளியேறினான்.

forest

இங்கே இக்கதையை நிறுத்திய வேதாளம் “தான் விரும்பாதவனான வீரபாகுவுடன், தனது சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக நீலி ஏன் பஞ்சாயத்தில் பொய் சொன்னாள்? வீரபாகு தான் மிகவும் விரும்பிய, திருமணம் செய்து கொள்வதாக சவால் விடுத்த, தன்னை சிறிதும் விரும்பாதவளான நீலியே வீரபாகுவுடன் திருமணம் நடந்தது என்று கூறியும், வீரபாகு அதை மறுத்து காட்டை விட்டு வெளியேறியது ஏன்? “இதற்கான பதிலைக் கூறு விக்ரமாதித்யா” என்று கூறியது.

சற்று நேரம் சிந்தித்த விக்ரமாதித்தியன் “ஆதிவாசிகளின் நீதி படி இரண்டு நபர்கள் எத்தகைய பகை கொண்டிருந்தாலும் ஆபத்துக்காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும்”, அதன் படி தன் உயிரை புலியிடமிருந்து காப்பாற்றிய வீரபாகுவிற்கு கைமாறாக, தன் சம்மதமில்லாமல் வீரபாகு தன்னைக் கட்டாயத் திருமணம் புரிந்தான் என்ற உண்மையைக் கூறினால் வீரபாகுவிற்கு மரண தண்டனை கிடைக்கும். அவன் உயிரை காப்பற்றேவே நீலி தன் சம்மதத்துடன் வீரபாகுவைத் திருமணம் புரிந்ததாக பொய் சொன்னாள். தனது இத்தகைய செயலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை எண்ணி குற்றவுணர்வோடும், ஆதிவாசி சமுதாயத்திற்கு தன்னால் அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற தன் மனசாட்சியின் படி அக்காட்டிலிருந்து வீரபாகு வெளியேறினான்” என்று பதிலளித்தான் விக்ரமாதித்யன்.

இதைக் கேட்டு விக்ரமாதித்யனைப் பாராட்டிய வேதாளம், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
அடர்ந்த வனத்தில் கிருஷ்ணர் புரிந்த அதிசய போர் – மகாபாரத கிளை கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், ஆன்மீக கதைகள், ஜோதிடம் மற்றும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -