வட மாநிலத்தில் பிரபல்யமாக இருக்கும் Aloo Curry என்று சொல்லப்படும் உருளைக்கிழங்கு ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் உருளைக்கிழங்கு இருந்தால் போதும். வீட்டில் இருக்கும் மற்ற சில பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப சுலபமாக தயார் செய்துவிடலாம். இதை பூரி, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சரி, இந்த வித்தியாசமான சுலபமான டிஷ் எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

முதலில் 1/2 கிலோ அளவு உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த உருளைக்கிழங்கு நன்றாக ஆறிய பின்பு, உருளைக்கிழங்கில் இருக்கும் தோலை உரித்து விட்டு, உருளைக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். கொழ கொழ வென மசித்து விடக்கூடாது. ஆங்காங்கே உருளைக்கிழங்குகள் கொஞ்சம் கட்டிகட்டியாக தெரியவேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.
ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், 2 – பச்சை மிளகாயை நான்காக வெட்டி எண்ணெயில் போட்டு, ஒரு நிமிடம் போல வதக்குங்கள். அடுத்தபடியாக அதே எண்ணெயில் 1/2 – ஸ்பூன் மஞ்சள் தூள், 1 – ஸ்பூன் காஷ்மீரி சில்லி தூள், இருந்தால் அதை சேர்த்து 30 வினாடிகள் வரை, மிளகாய்த்தூளை எண்ணெயிலேயே வதக்கி விட வேண்டும். (காஷ்மீரி சில்லி பவுடர் இல்லை என்றால் தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.)

மசாலா பொருட்கள் சேர்த்த இந்த எண்ணெயில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இந்த உருளைக்கிழங்கை எண்ணெயில் ஒரு நிமிடம் போல வதக்கி விட்டால் போதும். அடுத்தபடியாக உருளைக் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். (நிறைய தண்ணீர் ஊற்றக் கூடாது. இது கிரேவி பதத்திற்கு நமக்கு வரவேண்டும்.)
இந்த உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு தூளைத் தூவி, 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி பொடியை தூள் செய்து இதன் மேலே தூவி, அடுப்பை மீடியம் தீயில் வைத்து விட்டு, இரண்டு நிமிடங்கள் போல நன்றாக கொதிக்க வையுங்கள்.

இரண்டு நிமிடங்கள் கிரேவி கொதித்து வந்ததும், அடுத்தபடியாக இதோடு சாட் மசாலா – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மீண்டும் இரண்டு நிமிடங்கள் இந்த கிரேவியை கொதிக்க விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சூப்பரான வடமாநிலத்தவர்கள் செய்யும் aloo curry தயார். உருளைக்கிழங்கை வேக வைத்து விட்டால் போதும். 15 நிமிடத்தில் சூப்பரான ஒரு ரெசிபியை தயார் செய்துவிடலாம். உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபி பிடித்திருந்தால், உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரா இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.