அமாவாசையில் மறக்காம செய்ய வேண்டிய வாழைக்காய் வறுவல் ரெசிபி

- Advertisement -

ஒவ்வொரு அமாவாசையிலும் தவறாமல் கடைப்பிடித்து வரக்கூடிய சில விஷயங்கள் உண்டு. அதில் சமையல் சார்ந்த விஷயமும் அடங்கி இருக்கிறது. அமாவாசையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை, காய் மற்றும் கிழங்கு வகைகள் இருக்க வேண்டும். புடலங்காய் பித்ருலோகத்தில் இருக்கக்கூடிய காய் என்பதால் பித்ரு பூஜையின் பொழுது புடலங்காய் சமைப்பதும் உண்டு. அந்த வகையில் வாழைக்காய் வைத்து வறுவல் செய்வதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. வாழையடி வாழையாய் நம் குலம் தழைக்க, முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க இந்த வாழைக்காய் வறுவல் செய்வது உண்டு. அமாவாசையின் பொழுது செய்யக்கூடிய வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? அப்படின்னு இந்த பதிவில் இனி தெரிந்து கொள்வோம் வாங்க.

அமாவாசை வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 4, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், தனியா விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் – நான்கு, தேங்காய் துருவல் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

அமாவாசை வாழைக்காய் வறுவல் செய்முறை விளக்கம்:
இந்த வறுவல் செய்வதற்கு முதலில் சில பொருட்களை வறுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தனியா விதைகள், கடலை பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

இவை பொன்னிறமாக வறுபட்டு வரும் பொழுது, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். இவை ஆறியவுடன் பவுடராக கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் வாழைக்காயை தோல் உரித்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து, தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெங்காயம், தக்காளி எதையும் சேர்க்காமல் பருப்பை வச்சு வித்தியாசமான இந்த குழம்பை நிமிடத்தில் ரெடி பண்ணிடலாம். சுட சுட சாதத்தோடு வெறும் அப்பளம் மட்டும் இருந்தா போதும், தட்டு சோறும் நிமிஷத்துல காலி ஆயிடும்.

பின்னர் நீங்கள் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். பிறகு நீங்கள் பொடித்து வைத்த பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். வாழைக்காய் நன்கு மொறு மொறுன்னு வறுப்பட்டு வந்ததும் அடுப்பை அணைத்து அமாவாசை படையலுடன் வைத்து பூஜைகளை துவங்க வேண்டியதுதான். இந்த அமாவாசை வாழைக்காய் வறுவல் ரெசிபி கட்டாயம் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று வைத்து முன்னோர்களை வழிபட்டு பயனடையுங்கள். குறிப்பாக வரக்கூடிய தை அமாவாசையில் இதை செய்வது மகத்துவமான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -