ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான வேர்க்கடலை பொடி செய்வது எப்படி?

- Advertisement -

காரசாரம் என்றாலே அது ஆந்திரா சமையல்தான். ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான ஒரு வேர்கடலை பொடியையும், இதன் கூடவே சாதாரணமாக காரசாரமான வித்தியாசமான ஒரு இட்லி பொடியையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த இரண்டு ரெசிபியும் ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி. அதேசமயம் இந்த இட்லி பொடியோடு, இட்லியை அப்படியே முக்கி சாப்பிட்டால் அப்பப்பா அதன் சுவைக்கு சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. சரி நேரத்தைக் கடத்தாமல் சட்டென இரண்டு ரெசிபிகளையும் பார்க்கலாம் வாங்க.

verkadalai

முதலில் ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி செய்வது எப்படி பார்க்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய் – 10, வேர்க்கடலை – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், கறிவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இந்த பொருட்களை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இதோடு பூண்டு பல் – 5, உப்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார். இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன். சொல்வதற்கு வார்த்தையே கிடையாது‌ங்க.

idli-podi3

சரிங்க அடுத்தபடியா இன்னொரு இட்லி பொடியையும் பார்த்து விடுவோம். இந்த இட்லி பொடி அரைக்க நமக்கு தேவையான பொருட்கள். கறிவேப்பிலை – 2 கொத்து, வரமிளகாய் – 15, உளுத்தம் பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், மிளகு – 3 ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றக் கூடாது. மேலே சொன்ன ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக போட்டு சிவக்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பொருட்கள் எதுவும் கருகி விடக்கூடாது. அதே சமயம் வறுபடாமலும் இருக்க கூடாது. எல்லா பொருட்களும் பொன்னிறம் வரும் வரை வறுத்தால் போதும். (எள்லை கடாயில் கொட்டி படபடவென பொரிந்து வந்தவுடன் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்.)

nalla-kara-podi1

வறுத்த எல்லாப் பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, பொடிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க. சூப்பரான ஸ்பெஷலான இட்லி பொடி தயார். நிறையபேர் வீட்டில் மிளகு சீரகம் சேர்க்காமல் இட்லி பொடி அரைப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக மிளகு வாசனையும் ஜீரக வாசனையும் வாசனையும் சேர்ந்து இந்த இட்லி பொடி கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். ரெசிபிய மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ஒரு வாட்டி கண்டிப்பா இந்த இரண்டு ரெசிபியையும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -