மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று சொன்னவர் ஆஞ்சநேயர். ஆகையால் தான் ராமவதாரம் முடிந்த பிறகும் வைகுந்தம் செல்லாமல் இந்த பூலோகத்திலேயே நமக்காக இருந்தவர்.
யாரெல்லாம் ராம நாமத்தை உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு உறுதுணையாக நின்று அருள் புரிபவராக திகழ்கிறார்..அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஆஞ்சநேயரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற
ஆஞ்சநேயரை பல வேண்டுதலுக்காக நாம் வழிபடலாம். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகள் உள்ளது. நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலுக்கு ஏற்றவாறு நாம் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவருடைய அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஆஞ்சநேயரின் படம் கண்டிப்பான முறையில் தேவைப்படும். இந்த வழிபாட்டை ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூல நட்சத்திரம் அன்றோ அல்லது வியாழக்கிழமை அன்றோ செய்ய தொடங்க வேண்டும். மூல நட்சத்திரமும் வியாழக்கிழமையும் ஒருசேர வரும் பட்சத்தில் அந்த தினம் மிகவும் சிறப்புக்குரிய தினமாக கருதப்படுகிறது. அந்த தினத்தை தவறவிடாமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஆஞ்சநேயரின் உருவப் படத்திற்கு ஏற்றார் போல் ஒற்றை படை எண்ணிக்கையில் வெற்றிலைகளை வாங்கி வந்து அந்த வெற்றிலைகளை சுத்தம் செய்து அதில் செந்தூரத்தால் “ஜெயராம் ஸ்ரீராம்” என்று எழுதி மாலையாக கட்டி ஆஞ்சநேயரின் படத்திற்கு போட வேண்டும்.
அடுத்ததாக ஆஞ்சநேயரின் படத்திற்கு கீழே ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதற்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்து ஆஞ்சநேயரின் நாமங்களை கூறி 108 முறை செந்தூரத்தால் அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரின் போற்றிகள் தெரியாது என்று கூறுபவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் என்று கூறியவாறு 108 முறை அர்ச்சனை செய்யலாம்.
இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு அவருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும் அல்லது அவருக்கு மிகவும் பிடித்தமான வடையை நெய்வேத்தியமாக வைக்கலாம். அடுத்ததாக சுத்தமான சந்தனத்தை வாங்கி வந்து அதை மஞ்சள் உரசும் கல்லில் வைத்து இளைத்து கெட்டியாக எடுத்து ஆஞ்சநேயரின் மார்பில் வைக்க வேண்டும்.
ஆஞ்சநேயரின் நெஞ்சுக்குள் ராமர் சீதாப்பிராட்டி இருக்கிறார்கள் அந்த இடத்தில் நாம் சந்தனத்தை வைப்பதன் மூலம் அவர்களின் மனமும் குளிரும். ஆஞ்சநேயரின் மனமும் குளிரும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த அந்த வடையை அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும்.
இந்த செந்தூரத்தை குழந்தைகளுக்கும் நெற்றியில் வைத்துவிட்டு நாமும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் ஆஞ்சநேயருக்கு வெற்றியை மாலை சாற்றி செந்தூரத்தால் அர்ச்சனை செய்து வர நாம் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்து இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த காரியம் வெற்றிகரமாக நடந்திடும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க ஜாதிக்காய் பரிகாரம்
இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை மேற் கொண்டு நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவை நிறைவு செய்து கொள்ளுவோம்.