ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் சிறப்புக்கள்

aragalur-bairavar-

அகிலங்கள் அனைத்தையும் காக்கும் உலகநாதனாக சிவபெருமான் இருக்கிறார். தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை தீர்க்க பல்வேறு வடிவங்களை எடுத்து தேவர்கள், மனிதர்கள், பூதகணங்கள் என அனைவருக்கும் அருள்பாலித்துளார் சிவபெருமான். அந்த வகையில் அஷ்ட பைரவர்கள் உருவம் கொண்டு இன்றும் பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் “ஆறகளூர் அருள்மிகு காமநாத ஈஸ்வரர்” கோயிலின் சிறப்புகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

kaala bairavar

ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில் வரலாறு

1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில் கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனாக சிவ பெருமான் “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயரில் அருள்புரிகிறார். “அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும். இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர்.

சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு.

kaala bairavar

தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

ஆறகழூர் அஷ்ட பைரவர் கோயில் சிறப்பு

இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் நள்ளிரவில் அஷ்டபைரவர்களுக்கும் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.

bairavar

பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.

கோயில் அமைவிடம்

ஆறகளூர் அருள்மிகு காமநாத ஈஸ்வரர் திருக்கோயில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் என்கிற ஊருக்கு அருகில் இருக்கும் ஆறகழூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல சேலம் நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு காமநாத ஈஸ்வரர் திருக்கோயில்
ஆறகளூர்
சேலம் மாவட்டம் – 636 101

தொலைபேசி எண்

தொலைபேசி எண் இல்லை

இதையும் படிக்கலாமே:
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aragalur temple history in Tamil. Aragalur Bhairavar kovil varalaru matrum sirappugal in Tamil.