வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க போவது கிடையாது. குக்கரில் 2 விசில் விட்டு மைய கடைந்து விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாக்கணும்.
முதலில் ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் போட்டு நன்றாக அலசி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு குக்கரில் போட்டு கொள்ளவேண்டும். 1/2 கப் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் போதும். இந்த கீரையோடு தோல் உரித்த பூண்டு பல் 10, ஒரு சிறிய துண்டு புளி, சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு விடுங்கள் போதும்.
அதன் பின்பு விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து கொஞ்சமாக கல்லுப்பு போட்டு இந்த கீரையை மண் சட்டியில் மாற்றி மத்தை வைத்து நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். (சில பேர் இதை மிக்ஸியில் போட்டு கூட அரைத்துக் கொள்வார்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் மண் சட்டியில் கடையும் போது தான் சுவை அதிகமாக கிடைக்கும்.) இப்போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில் தாளிப்பு கொடுக்க வேண்டும். வரமிளகாய் இரண்டை சிறியதாக கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கிள்ளி வைத்திருக்கும் வர மிளகாய், கடுகு உளுந்தம் பருப்பு, சேர்த்து தாளித்து கீரையில் கொட்டி மீண்டும் ஒருமுறை மத்தைக் கொண்டு கடைந்தால் சூப்பரான அரைக்கீரை மசியல் தயார் ஆகிவிட்டது. சுடச்சுட சாதத்தில் இந்த கீரையை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும். சிலபேர் தயிர் சாதத்திற்கும் இந்த கீரையை தொட்டு சாப்பிடுவார்கள்.
இதேபோல் இந்த கீரைக்கு வர மிளகாய் சேர்க்காமல் குக்கரில் போட்டு வேக வைக்கும்போதே பச்சை மிளகாய் சேர்த்து சமைத்தாலும் சுவையாகத்தான் இருக்கும். சீரகத்தின் வாசம் உங்களுக்கு பிடித்தால் சீரகமும், தாளிக்கும்போது சேர்த்துக் கொள்ளலாம். சில பேர் வீட்டில் வெங்காய வடகம் இருக்கும் அல்லவா. அந்த வெங்காய வடகத்தை சிறிது தாளிப்பில் சேர்த்துக் கொண்டாலும் இந்த கீரையின் சுவை இருமடங்கு அதிகரித்துவிடும்.
மிக மிக குறைந்த பொருட்களை சேர்த்து குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய கீரை ரெசிபி இது. இப்படி கீரையை சமைக்கும் போது எந்த சத்துக்களும் உங்களுக்கு வீணாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.