இப்படி ஒரு அரவை சாம்பாரை இதற்கு முன் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே முடியாது! வித்தியாசமான, சுலபமான, சுவையான டிஃபன் சாம்பார்!

Aravai sambar

மசாலா பொடி போட்டு செய்யும் சாம்பாரை விட, எப்போதுமே மசாலாவை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கட்டாயம் சுவையும், மணமும் அதிகமாகத்தான் இருக்கும். அந்த வகையில் டிபன் வகைகளுக்கு ஏற்றது போல, ஒரு அரவை சாம்பாரை தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சாம்பார் இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம் என்று பலகார வகைகளுக்கு பொருந்தும் அளவிற்கு கமகம சாம்பாராக கட்டாயம் இருக்கும். இந்த அரவை சாம்பாரை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

Aravai sambar

Step 1:
முதலில் அரவையை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம். அகலமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில்  வரமிளகாயை 5, போட்டு சிவக்கும் அளவிற்கு, வறுக்க வேண்டும். அதன் பின்பு வர மல்லி – 1ஸ்பூன், கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து இவைகளை வரிசையாக, ஒவ்வொன்றாக சேர்த்து, எண்ணெயில், வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். சிவக்க வறுத்தால், சாம்பாரின் நிறமும் சுவையும் சூப்பராய் இருக்கும். வறுத்து எடுத்த இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வேண்டும். தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விடுங்கள்.

Step 2:
இப்போது அதே கடாயில், ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில் சிறிய அளவிலான, பெரிய வெங்காயத்தை(பெரிய வெங்காயம் 1) சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, பெரிய தக்காளி 1, சிறு துண்டுகளாக வெட்டி வெங்காயத்தோடு சேர்த்து, 5 நிமிடம் வரை வதக்கினால் போதும். இறுதியாக தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து தேங்காயின் வாசம் வரும் வரை வதக்கி, வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்த்த இந்த விழுதையும் ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

Kadaai

Step 3:
இறுதியாக, முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களையும், வெங்காய தக்காளி தேங்காய் விழுதையும், மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரவை பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரவை அப்படியே தனியாக இருக்கட்டும்.

- Advertisement -

Step 4:
100 கிராம் அளவு துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் போட்டு, 3 விசில் விட்டு குக்கரில் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு கொழகொழவென்று மாறக்கூடாது சரியான பதத்தில் வேக வேண்டும்.

cooker2

Step 5:
அடுத்ததாக கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 10 சின்ன வெங்காயம் சேர்த்து, 2 பச்சை மிளகாய் சேர்த்து, வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அதன் பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், போன்ற சாம்பார் காய்கள் எதுவாக இருந்தாலும், பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

vethakkal

வதக்கிய காய்கறிகளுக்கு தேவையான உப்பை தூவி, பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை கரைத்து, காயோடு சேர்த்து, மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அரைத்த விழுதை ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். இந்த இடத்தில் சாம்பாருக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து விடுங்கள். ஐந்து நிமிடம் அரவை கொதித்த பின்பு, தயார் செய்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். அரவை சாம்பார் என்பதால், சாம்பார் கொதிக்க கொதிக்க கெட்டித்தன்மை வரும். தேவையான அளவு தண்ணீரை, பருப்பு சேர்க்கும் போதே ஊற்றிவிட வேண்டும்.

kothitha sambar

சாம்பார் பச்சை வாடை போக, கொதித்து தயாரான பின்பு, சாம்பாரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடுங்கள். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், சேர்த்து சிவக்க வறுத்து சாம்பாரில் கொட்டி விடுங்கள். அதன் பின்பு தாளிப்பு கரண்டியில், ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து கொட்டி விடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி விட்டால், கமகம சாம்பார் தயார். பார்ப்பதற்குத்தான் இவ்வளவு வேலையா என்று தோன்றும். ஆனால் செய்யும் போது சுலபமாக செய்து விடலாம்.