வராகி அன்னைக்கு மிக மிக விசேஷமான ஆஷாட நவராத்திரியானது தொடங்கிவிட்டது. 6-7-2024 முதல் 15-7-2024 வரை ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த ஆஷாட நவராத்திரி முழுவதும் வாராஹி வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள், இந்த 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து, வாராகி தாயை மனதார நினைத்து பின் சொல்லக் கூடிய வழிபாட்டை செய்தீர்கள் என்றால், உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. நவராத்திரியில் எல்லோராலும் செய்ய படக்கூடிய வகையில் ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.
ஆஷாட நவராத்திரி 2024
முதலில் இந்த வழிபாட்டிற்கு கட்டாயமாக வாராகித் தாயின் திருவுருவப் படம் வேண்டும் என்பது அவசியம் கிடையாது. வராகியின் திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இல்லை என்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். உங்கள் வீட்டில் வாராகியின் திருவுருவப்படம், சிலை எது இருந்தாலும் அதை சுத்தம் செய்து விட வேண்டும். மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
சிலையாக இருந்தால் அதற்கு கட்டாயம் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு, வாராகியை மனதில் நினைத்து இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
விரலி மஞ்சள் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, இப்படி எத்தனை மஞ்சள் வேண்டுமென்றாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒற்றைப்படையில் மஞ்சள் கொம்புகள் இருக்க வேண்டும். மஞ்சள் நிற நூலில், இந்த மஞ்சளை மாலையாக கட்டி வாராகி தாய்க்கு சாத்தி விட வேண்டும். பூ பழம், விளக்கு, தீபம் தூபம் வழக்கம் போல பூஜைக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஆஷாட நவராத்திரியில் வீட்டில் ஒரு பிரத்தியேகமான விளக்கு ஏற்ற வேண்டும்.
அதற்கு நவதானியமும் ஒரு ஜாதிக்காயும் தேவை. ஒரு தாம்பூல தட்டில் நவதானியத்தை பரப்பி வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த எண்ணெயில் ஒரே ஒரு ஜாதிக்காயை போட்டு, விளக்கு ஏற்றி வாராஹிதாயின் மந்திரத்தை சொல்லி உங்க கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தீப தூப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். வாராஹிக்கு கிழங்கு வகைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே ஏதாவது ஒரு கிழங்கை அவித்து நெய்வேதியமாக வைக்கவும்.
இந்த வழிபாட்டை மனநிறைவோடு செய்யுங்கள். பூஜை நிறைவடைந்த பிறகு, அந்த மஞ்சள் கொம்புகளை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சளை இழைத்து பெண்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம். அந்த ஜாதிக்காயை எண்ணெயில் இருந்து எடுத்து நன்றாக துடைத்துவிட்டு ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விட்டால் நல்லது.
இதையும் படிக்கலாமே: காலையில் எழுந்ததும் கூற வேண்டிய மந்திரம்
இல்லையென்றால் பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். ஜாதிக்காய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். அது ரொம்பவும் பழைசான பிறகு அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடவும். இந்த எளிமையான பரிகாரத்தை ஆஷாட நவராத்திரியில் ஏதாவது ஒரு நாள் உங்களுடைய வீட்டில் செய்தாலும், அந்த அன்னையின் அருள் ஆசி நிறைவாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.