தமிழ் கடவுள் முருகன். அழகன் முருகன், இவனுக்கு மட்டுமே சொந்தமான நாட்கள், இனி வரக்கூடிய 7 நாட்கள். மகா கந்த சஷ்டி விரதம் துவங்கிவிட்டது. இன்று கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள். முருகனுக்கு அழகான தமிழ் பாடல்களை, இந்த நாட்களில் பாடி முருகனை மகிழ்வித்து நாம் வரங்களைக் கேட்டால், அவன் இல்லை என்று சொல்ல மாட்டான்.
நாம் கேட்ட வரங்களை வாரிக் கொடுப்பான். அந்த வகையில் இன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான முருகர் வழிபாட்டையும், பாட வேண்டிய எளிமையான ஒரு முருகன் பாட்டையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முருகனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்ற எந்த வரையறையும் கிடையாது. ஆனால் சஷ்டி விரதம் என்பது குழந்தை பாக்கியம் வேண்டி, தம்பதிகள் இருக்க வேண்டிய விரதமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியத்திற்கு மட்டும்தான் இந்த விரதமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. வேறு ஏதாவது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றாலும் கந்தனை நினைத்து இந்த 6 நாட்களும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
உங்களுடைய சவுகரியம் போல விரதம் இருங்கள். உடம்பை அதிகமாக வருத்திக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு எதுவும் செய்ய வேண்டாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையும் முடியும். நம்முடைய உடல் நன்றாக இருந்தால் தான் வாழ்க்கையும் இனிமையாக அமையும். முருகன் கருணை உங்களுக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரம் தான் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்.
அடுத்தவர்களை பார்த்து இவர்களைப் போல நாமும் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் வழிபாட்டை செய்யக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், உங்களுடைய மனதிற்குள் சொல்ல வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என்று. அப்போதுதான் வழிபாட்டிற்கு உண்டான பலனும் கிடைக்கும்.
சஷ்டி முதல் நாள் வழிபாடு
உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, அவனுக்கு செவ்வரளி பூக்களை மாலையாக போட்டு, அவனை 6 முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கொண்டு, அந்த முருகப்பெருமான் முன்பாக அமர்ந்து கொள்ள வேண்டும். முருகனை கண் குளிர பார்க்க வேண்டும். இந்த பாடலை ஒரு முறை பார்த்தே படியுங்க போதும்.
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.
அவிநாசி பத்தில் இருக்கக்கூடிய அழகான பாடல் வரிகள். இதற்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோமா. பன்னிரு தோள்கள் வாழ்க, ஆறுமுகம் வாழ்க, மலை பிளந்த வேல் வாழ்க, சேவல் வாழ்க, மயில் வாழ்க, தெய்வயானை தேவியார் அவர்களே வாழ்க, வள்ளியம்மையே வாழ்க, நல்லடியார் அனைவரும் வாழ்க. இதுதான் இந்த பாடல் வரியில் இருக்கும் அர்த்தம்.
இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி வேல் வழிபாடு
உங்களால் இந்த பாடலை இன்று ஒரு முறை படிக்க முடியும் என்றாலும் படியுங்கள், அல்லது முருகனுக்கு முன்பு 21 முறை, 51 முறை எத்தனை முறை இந்த பாடலை படிக்கிறீர்களோ, அவ்வளவு மனமகிழ்ச்சி முருகனுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் சமையத்தில் வரங்களை கேட்டால் அதுவும் பல மடங்காக பெருகி கிடைக்கும். இதுதான் இன்றைய கந்த சஷ்டியின் முதல் நாள். எளிமையான வழிபாடு, நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் முருகப் பெருமான் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து இந்த பாடலை படித்து முருகனின் அருளைப் பெறவும்.