மசால் வடை செய்ய இனி பருப்பு ஊறவைத்து மாவு அரைத்து கஷ்டப்பட வேண்டாம். பருப்பு இல்லாமல் மசால்வடையா? அது எப்படி?

vadai
- Advertisement -

கடலை பருப்பு இல்லாமல் மாவு அரைக்காமல் மசால் வடை செய்ய முடியுமா. செய்யலாமே, அவல் வைத்து சுலபமான முறையில் ஒரு மசால் வடை எப்படி சுடுவது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனி மாவு அரைத்து கஷ்டப்பட தேவையில்லை. வாங்க ரெசிபியை தெரிந்து கொள்வோம். இந்த வடையை செய்வதற்கு கொஞ்சம் மொத்தமாக இருக்கும் அவல் பயன்படுத்திக் கொள்ளலாம். லேசாக இருக்கும் பேப்பர் போன்ற அவலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

aval

மொத்தமாக இருக்கும் அவல் என்றால் அதை ஒரு முறை கழுவி விட்டு, 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பேப்பர் போல இருக்கும் அவல் என்றால் அதை ஒரு முறை தண்ணீரில் போட்டு கழுவி பிழிந்து எடுக்கும் போதே நன்றாக ஊறி இருக்கும். தண்ணீரி போட்டு ஊற வைத்த 1 கப் அவலை, தண்ணீரைப் பிழிந்த தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

1 கப் அவலுக்கு, 1/4 கப் அளவு பொட்டுகடலை நமக்கு தேவை. இந்த 1/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு, பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். (இந்த பொட்டுக்கடலை பொடியை மிக்ஸி ஜாரில் இருந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.)

vadai2

அடுத்தபடியாக வரமிளகாய் 3, சோம்பு 1/2 ஸ்பூன், பூண்டு பல் – 6, சிறிய துண்டு – இஞ்சி, இந்த 4 பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொரகொரப்பாக அரைத்த விழுதோடு முதலில் ஊறவைத்து, தயாராக எடுத்து வைத்திருக்கும் அவலைப் போட்டு மிக்ஸியில் இரண்டு ஒட்டு ஓட்ட வேண்டும். பல்ஸ் பட்டனில். (ஊறவைத்த அவலும் இந்த மசாலாப் பொருட்களும் ஒன்றாக கலந்து பிசைய வேண்டும் என்பதற்காகத் தான். இதை நாம் செய்கின்றோம். அவலுடன் மசாலா பொருட்களை கையில் சேர்த்துப் பிசைய கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பதால், இப்படி மிக்ஸி ஜாரில் போட்டு அடித்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.)

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த கலவையை அப்படியே ஒரு அகலமான பவுலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இந்த கலவையோடு அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா தழை, இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து, உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து இந்த மாவை மசால் வடை மாவு பக்குவத்திற்கு பிசைய வேண்டும்.

vadai3

இப்போது நமக்கு மசால்வடை செய்வதற்கு மாவு தயார். இந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அந்த உருண்டைகளை மசால் வடை போல தட்டி கடாயில் எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொரு மொரு அவல் மசால் வடை தயார். இதை டீ டைம் ஸ்னாக்ஸ்க்கு செஞ்சி கொடுக்கலாம். அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

vadai4

பின்குறிப்பு: இந்த வடையில் கருவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா இலைகளுக்குப் பதிலாக அரைக்கீரை, சிறு கீரை போன்ற கீரை வகைகளையும் பொடியாக வெட்டி சேர்த்துக் கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதேபோல இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தும் வடை சுடலாம். அதுவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வடை மாவை தயார் செய்து சுட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -