உறவுக்குள் சண்டையா ? இந்த கோயிலிற்கு செல்லுங்கள் சரியாகிவிடும்

alagar-temple

சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள். ஆனால், வளர்ந்தவர்கள் சண்டை போட்டுப் பிரிந்துவிட்டால், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேருவது சற்றுக் கடினம். குடும்பத்தில், உறவினர்களுக்கிடையில், நண்பர்களுக்கிடையில் ஏதோ ஒரு காரணத்துக்காகச் சண்டை வந்து, சம்பந்தப்பட்டவர்கள் மனவருத்தத்துடன் பிரிந்துவிடுவது உண்டு. அப்படிச் சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் அன்புப் பிணைப்போடு ஒன்று சேருவதற்கென்றே ஒரு கோயில் இருக்கிறது.

alagar

மதுரை அழகர்கோவில்தான், அந்தக் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும் தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள, மதுரை அழகர்கோவிலுக்கு நேரில் சென்றோம்.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர் சேவுகமூர்த்தி என்பவரிடம் பேசினோம்.

alagar

- Advertisement -

“சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் ஒன்றுசேர இங்கே வந்து, காவல்தெய்வமான கருப்பனுக்குக் காணிக்கை செலுத்தி, விபூதி வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு, கள்ளழகர் கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கைப் பணத்தைச் செலுத்த வேண்டும். தொடர்ந்து மலை மேல் இருக்கும் ராக்காயி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

alagar

கையில் எடுத்துச் செல்லும் சொம்பில் கொஞ்சம் தீர்த்தமும் எடுத்துக்கொண்டு, மீண்டும் கருப்பசாமி கோட்டை வாசலுக்கு வந்துவிட வேண்டும். கோயில் பிராகாரத்தில் உட்கார்ந்துகொண்டு, இரு தரப்பினரும், `உங்களுக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. அப்படிப் பகையோ வெறுப்போ இருந்தால், அதைக் கருப்பனும் அழகர்மலையானும் எடுத்துவிடுவார்கள். இது சத்தியம், சத்தியம்…’ என்று தீர்த்தச் சொம்பின் மீது மூன்று முறை சத்தியம் செய்துகொள்ள வேண்டும். பிறகு, சொம்பில் கொண்டுவந்த தீர்த்தத்தை ஒருவர்மீது மற்றவர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா ?

சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு, கோயிலில் கிடைக்கும் சம்பா தோசையை வாங்கி, இரண்டு தரப்பினரும் சாப்பிட வேண்டும். இதன்மூலம் சண்டை, வெறுப்பு, கோபம் எல்லாமே நீங்கிவிடும் என்று பாரம்பர்யமாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மேலும், இப்படிச் செய்தால் சண்டைக்குப் பிறகு எதிர்த்தரப்பினரை நாம் திட்டியது, காசு வெட்டிப் போட்டது, மண்ணை வாரித் தூற்றியது போன்ற எல்லாமே நீங்கிவிடுவதாகவும் நம்புகிறார்கள். இதன்மூலம் பிரிந்த பல உறவுகள் மீண்டும் சேரமுடியும்” என்று கூறினார் சேவுகமூர்த்தி.