சுட சுட பாதாம் பால், ஜில்லுனு பாதாம் பால் இனி காசு கொடுத்து கடையில வாங்காதீங்க, வீட்டிலேயே இப்படி 10 நிமிடத்தில் செஞ்சு பாருங்க!

badam-milk0
- Advertisement -

பொதுவாக பாதாம் பருப்பை இரவு நேரத்தில் ஊற வைத்து அதன் மேல் தோலை உரித்து தினமும் காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுவடையும் என்று அனைவருக்கும் தெரியும். இந்த பாதாம் பருப்பை கொண்டு செய்யப்படும் பாதாம் பால் ஜில்லென்று ஃப்ரீசரில் வைத்து ஒரு வகையிலும், சுவையான சூடான பாதாம் பால் என்று ஒரு வகையிலும் கடைகளில் விற்பனைக்கு உண்டு.

பாதாம் பால் செய்வது ஒன்றும் கஷ்டமான வேலை அல்ல! ரொம்பவே சுலபமாக பத்து நிமிடத்தில் சட்டுனு செய்யக் கூடியது தான். இதற்காக கடைகளில் அதிக செலவு செய்து காசு கொடுத்து வாங்கி பருக வேண்டிய அவசியம் இனி இல்லை! நம்முடைய வீட்டிலேயே தரமாக ரிச் லெவல் பாதாம் மில்க் எந்த இன்ஸ்டன்ட் மிக்ஸரும் பயன்படுத்தாமல் சுலபமாக செய்ய முடியும். அதை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பாதாம் பால் செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் – 30, கெட்டியான பால் – மூன்று கப், ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், குங்குமப்பூ – சிறிதளவு.

பாதாம் பால் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு பாதாம் பருப்பை எடுத்து அலசி தண்ணீர் ஊற்றி இரவில் ஊற வைக்க வேண்டும். 30 பாதாம் பருப்புகள் எடுத்தால் சரியாக இருக்கும். உடனுக்குடன் நீங்கள் செய்ய வேண்டும் என்றால் சூடான தண்ணீரில் பாதாம் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் சுலபமாக உரித்து விடலாம். பாதாம் பருப்பை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலே தூவி அலங்கரிப்பதற்கு தேவைப்படும்.

- Advertisement -

ஊற வைத்த பாதாம் தோலுரித்த பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் கெட்டியான பால் மூன்று கப் அளவிற்கு ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பால் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பாதாம் பாலை சேர்க்க வேண்டும். பிறகு நன்கு கொதிக்கும் பொழுது பாதாம் பால் இனிப்புக்கு தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நிறத்தை கொடுக்க ஒரு சிட்டிகை குங்குமப் பூவை தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்.

குங்குமப்பூ இல்லாதவர்கள் அதற்கு பதிலாக கேசரி பவுடர் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அரை டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காயை நைஸாக அரைத்து சேருங்கள். பாதாம் பால் கெட்டியான பதத்திற்கு நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து மேலே பொடித்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி சுடச்சுட பரிமாறினால் சுவையான பாதாம் பால் தயார் அல்லது அதை நன்கு ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பருகினால் ஜில்லென்ற பாதாம் பால் ரெடி! உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து பாருக வேண்டியது தான்! ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பாதாம் பால் நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -