சாதாரண சட்னி செய்வதற்கு பதிலாக பீட்ரூட்டை வைத்து சுவையான சத்தான சட்னி செய்யலாம்

beetroot chutney
- Advertisement -

சத்து மிகுந்த உணவுப் பொருட்களை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறும். இதை எந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வியாக இருக்கிறது. அதே சமயம் எந்த முறையில் செய்தால் வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடுவார்கள் என்பது மிக மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பீட்ரூட்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பீட்ரூட்டை நாம் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய கண்பார்வையில் இருக்கக்கூடிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். ரத்தத்தில் இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி ஏற்படும். கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு பீட்ரூட் ஒரு அருமருந்தாக திகழ்கிறது. மேலும் பீட்ரூட்டை நாம் சாப்பிடுவதன் மூலம் முகம் பொலிவு பெறும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சிறுநீரக எரிச்சலை சரி செய்யவும் பீட்ரூட் உதவி செய்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • எண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • காய்ந்த மிளகாய் – 1
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • வெங்காயம் பெரியது – 1
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை பொரியலுக்கு உரசுவது போல் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்க்க வேண்டும்.

இவை இரண்டும் சிவந்த பிறகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு லேசாக வதங்கிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் அளவிற்கு வதக்க வேண்டும். பிறகு துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டை அதில் சேர்க்க வேண்டும். பிறகு புளியையும் சேர்த்து இரண்டு நிமிடம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவை அனைத்தையும் ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளலாம். பிறகு சட்னியை தாளிப்பதற்காக தாளிப்பு கரண்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: குட்டிஸ் ஃபேவரிட் சப்போட்டா ஐஸ்க்ரீம் எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பீட்ரூட்டை பொறியலாகவும், கூட்டாகவும் செய்யும்பொழுது சாப்பிடாதவர்கள் கூட இப்படி சட்னி செய்து இட்லி, தோசை, சப்பாத்தி என்று கொடுக்கும் பொழுது அதை விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டால் என்ன அதன் சத்து கிடைத்தால் போதுமல்லவா? முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -