கறிக்குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு, கருப்பு கொண்டை கடலை குழம்பு வைப்பது எப்படி? அசைவம் சாப்பிட முடியாத சமயங்களில், அசைவப் பிரியர்களுக்காகவே இந்த குழம்பு ரெசிபி!

black-channa

நிறைய பேருக்கு அசைவ குழம்பு இல்லை என்றால் சாதம், இட்லி, தோசை எதுவுமே உள்ளே இறங்காது. இருப்பினும் சில வீடுகளில், சில நாட்களில் அசைவ குழம்பை சமைக்க முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் கொண்டைக்கடலையை வைத்து ஒரு சுவையான குழம்பை இப்படி தயார் செய்து பாருங்கள். அசைவ குழம்பின் வாசமும், சுவையும் நிச்சயம் இதில் இருக்கும். அப்படி ஒரு ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். உங்களுடைய வீட்டில் அசைவப் பிரியர்கள் உள்ளார்களா? நீங்களும் தாராளமாக இந்த குழம்பை நாளை முயற்சி செய்து பார்க்கலாம்.

black-channa1

முதலில் 100 கிராம் அளவு கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 2, வரமிளகாய் – 6, பூண்டுப்பல் – 6, சிறிய துண்டு – இஞ்சி, சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் நன்றாக வதக்க வேண்டும்.

black-channa1

இதில் வெங்காயம் பாதி அளவு வதங்கியவுடன், இறுதியாக 1 தக்காளி பழத்தை சேர்த்து, தக்காளி பழத்தின் பச்சை வாடை போகும் வரை 2 நிமிடங்கள் வதக்கி விடுங்கள். இறுதியாக 3 டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் துருவலை சேர்த்து, மீண்டும் 2 நிமிடங்கள் வதக்கி இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்து விடுவோம். அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை – 1, கல்பாசி – சிறிதளவு, சோம்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

black-channa3

அதன் பின்பு 1 பெரிய வெங்காயத்தை நீளமாக வெட்டி போட்டு ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கி, ஊற வைத்திருக்கும் கொண்டைக் கடலையை குக்கரில் போட்டு விடுங்கள். அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் ஊற்றி விட வேண்டும். கொண்டைக் கடலையையும், விழுதையும் ஒரு நிமிடம் நன்றாக எண்ணெயில் வதக்குங்கள்.

black-channa4

அதன் பின்பு தாராளமாக இந்த இடத்தில் குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றலாம். (இந்த குழம்பிற்கு 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும்.) தண்ணீர் ஊற்றி ஒரு முறை எல்லாப் பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, இறுதியாக 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி போட்டு, விசில் போட்டு விடுங்கள். 5 விசில் வரட்டும். விசில் வரும்போதே இதனுடைய வாசம் ஆளை தூக்கும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுங்கள். இதனுடைய வாசமே நாக்கில் எச்சில் ஊற வைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.