என்னதான் ருசியான குழம்பு வைத்தாலும், மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதேனும் ஒரு பொரியல் அவசியமாக இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் சாதம் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். ஒரு சிலருக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட பொரியல் இல்லை என்றால் சுத்தமாக சாப்பிடவே பிடிக்காது. எனவே தினமும் ஒரு பொரியலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதிலும் வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட யோசித்து செய்ய வேண்டும். ஒரு சிலர் அவர்களுக்குப் பிடிக்காத காய்கறி என்றாலும் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். எனவே ருசியாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் அந்த காய்கறிப் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிட இந்த மசாலா பொடி சேர்த்து காய்கறி பொரியல் செய்தால் போதும், அனைவருக்குமே பிடிக்கும். வாருங்கள் அப்படி மசாலா பொடி சேர்த்து செய்யும் இந்த கத்தரிக்காய், முருங்கைக்காய் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 150 கிராம், முருங்கைக் காய் – 2, வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், துவரம் – பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், வர மிளகாய் – 2, பூண்டு – 3 பல், கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு கத்தரிக்காயின் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, அதனை நான்கு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு முருங்கைக் காயையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்று பல் பூண்டை உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பின் மீது கடையை வைத்து, அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், மிளகு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் கத்தரிக்காய், முருங்கைக் காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவேண்டும்.
காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்ததும் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி, 5 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.