சிம்பிலான ‘கத்திரிக்காய் கார மசியல்’ இப்படி வித்தியாசமா ஒரு முறை செஞ்சு பாருங்க எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க!

kathirikkai-masiyal1
- Advertisement -

எல்லோரும் விரும்பி சாப்பிடக் கூடிய கத்திரிக்காய் பல வகைகளில் நாம் செய்து சாப்பிட்டது உண்டு. கத்திரிக்காய் வறுவல், கத்தரிக்காய் பொரியல் என்று செய்து சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இது போல கத்திரிக்காய் கார மசியல் செய்து கொடுத்து பாருங்க, இது ஒரு வித்தியாசமான தனி சுவையை கொடுக்கும். கத்திரிக்காய் வேண்டாமென்று ஒதுக்கி வைப்பவர்கள் கூட இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான இந்த கத்திரிக்காய் கார மசியல் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

கத்திரிக்காய் கார மசியல் செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஆறு, பூண்டு – பனிரெண்டு பற்கள், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

கத்திரிக்காய் கார மசியல் செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ கத்திரிக்காயை அழுகல் இல்லாமல் பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கத்திரிக்காய் எடுத்து நெருப்பில் காட்டி வாட்டி எடுக்க வேண்டும். நெருப்பில் காட்டும் பொழுது அதன் தோல் பகுதி நிறம் மாறி அப்படியே உறிந்து வந்துவிடும். பிறகு எல்லா கத்திரிக்காய்களையும் தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அதன் தோலினை நீங்கள் உரித்தால் ஈசியாக பிரிந்து வந்து விடும்.

பிறகு உள்ளிருக்கும் சதை பற்றை நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். வாணலி சூடேறியதும் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இதற்கு கடுகு எதுவும் போட வேண்டாம். சீரகம் சேர்த்ததும், தோலுடன் கூடிய பூண்டு பற்களை இடித்து சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பூண்டு வதங்கியதும் தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் பொழுது காரத்திற்கு ஏற்ப பச்கை மிளகாய்களை கிள்ளி சேர்த்து வதக்கி விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதக்கியதும் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி மசிய வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்கி விடுங்கள்.

இவையெல்லாம் நன்கு வதங்கியவுடன் நீங்கள் மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கத்திரிக்காய் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நன்கு கலந்து வர இரண்டு நிமிடம் நன்கு வதக்கி விடுங்கள். அதன் பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழையை கார்னிஷ் செய்து அப்படியே சுட சுட பரிமாற வேண்டியதுதான். அவ்வளவுதான் ரொம்பவும் சூப்பராக செய்யக்கூடிய இந்த கத்திரிக்காய் கார மசியல் நிச்சயமாக வித்தியாசமான சுவையை உங்களுக்கு கொடுக்க போகிறது. நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் ட்ரை பண்ணி அசத்திடுங்க!

- Advertisement -