நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் ப்ரோக்கோலி வாங்கினால் கண்டிப்பாக இப்படி ஈஸியா கிரேவி செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும்!

broccoli-gravy1_tamil
- Advertisement -

இம்யூன் பவரை அதிகரிக்க செய்து, இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும். அந்த வகையில் இந்த ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான கிரேவி எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

அரைக்க: சீரகம் – 2 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், தனியா விதைகள் – 2 ஸ்பூன், பூண்டு பல் – 15, இஞ்சி – சிறு துண்டு, வர மிளகாய் – 6. சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், மீடியம் சைஸ் ப்ரோக்கோலி – 1, பிரிஞ்சி இலை – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1, சிறிய குடைமிளகாய் – அரை பாகம், தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப், கரம் மசாலா – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

ப்ரோக்கோலி கிரேவி செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகு, சீரகம், தனியா விதைகள், 15 பல் தோல் உரித்த பூண்டு, அதில் பாதி அளவிற்கு இஞ்சி துண்டுகள் தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு மிக்ஸியை இயக்கி நைஸ் பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள ப்ரோக்கோலி துண்டுகளை சேர்த்து மீடியம் ஃபிளேமில் ஐந்து நிமிடம் நன்கு எல்லா புறமும் வேக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். தாளிக்க இரண்டு பிரிஞ்சி இலையை சேர்த்து, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் தூவி, பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் உதிர்த்து சேர்த்து வதக்குங்கள். நன்கு இவை வதங்கி வந்தவுடன், குடைமிளகாய் இருந்தால் அதை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடம் நன்கு வதக்கியதும், நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை இதில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு பெரிய தக்காளி ஒன்றை நன்கு கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து எடுத்து இதில் சேருங்கள். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கியதும் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். பின்னர் நீங்கள் வறுத்து எடுத்து வைத்துள்ள ப்ரோக்கோலி துண்டுகளையும் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியத்தோடு சேர்ந்து அழகும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காகவே ஒரு சூப்பரான அதே சமயம் சிம்பிளான வெரைட்டி ரைஸ். சிம்பிளான அதே சமயம் ஹெல்தியான ரெசிபி.

ஒரு ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டி எடுத்ததும் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 7 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு மூடி வைத்து வேக விடுங்கள். கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும், கொஞ்சம் போல கரம் மசாலா, நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சூப்பரான டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த ப்ரோக்கோலி கிரேவி இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம்ன்னு எல்லாத்துக்குமே தொட்டுக்க செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -