சிம்மத்தில் இருந்து சொந்த வீடான கன்னி ராசியில் உச்சம் பெறும் புத பகவான்! 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்க இருக்கும் அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன?

budhan
- Advertisement -

நவகிரகங்களில் மிகவும் வேகமாக மற்றும் இளமையாக இருக்கக்கூடிய கிரகம் புதன் ஆகும். இந்த புத பகவான் நமக்கு புத்திசாலித்தனத்தையும், பேச்சுத் திறன், திறமை, நண்பர்கள், வணிகம், தகவல் தொடர்பு, புள்ளியியல், கணிதம், சகோதரத்துவம், அறிவு சார்ந்த பணிகள், மனம், ஜோதிடம் என்று பல வகைகளில் காரகத்துவம் புரிகிறது. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் இந்த 9 கிரகங்களில், புதன் கிரகம் வரும் ஞாயிற்றுக் கிழமையில் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயருகிறது. இதனால் உண்டாகக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை 12 ராசிக்காரர்களுக்கும் பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கன்னி ராசியில் இடம்பெயர போகும் புத பகவானால் நிறைந்த அதிர்ஷ்டம் வரப்போகிறது. பேச்சால் வரக்கூடிய வருமானம் அதிகரிக்கும். பேச்சாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் புகழ் ஓங்கி இருக்கும். உடன்பிறந்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தை குறிக்கும் ஆறாம் இடத்தில் அமர போவதால் உங்கள் ராசிக்கு தோல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வலுவாகலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. யோகம் பெற அரிசி தானம் செய்யுங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு புத பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலு பெற்று அமர போவதால் உங்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமையால் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு சிறு வாய்ப்புகளையும் தட்டி கழிக்காமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சகோதரர்கள், நண்பர்கள், மேலதிகாரிகள் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும். புதனால் யோகம் பெற தினமும் பச்சை நிற உடை அணிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் பெயர்ச்சியால் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க போகிறது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். பணம் எவ்வளவு வந்தாலும், அது கட்டுக்கு அடங்காமல் செலவு செய்யவும் நேரிடும். வீடு, வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படலாம். வருகின்ற வருமானத்தை சுப விரயமாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் பெயர்ச்சியால் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கும். புதன் பகவான் அமர்ந்திருக்கும் இடம் உங்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபடுத்தும். பகைத்துக் கொண்ட ரத்த உறவுகள் உங்களை புரிந்து கொள்ளும். உடன்பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம், கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். யோகம் பெற வஸ்திர தானம் மேற்கொள்ளுங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் வாக்கு ஸ்தானத்தில் அமர இருப்பதால் எதிலும் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உங்களைப் பின்தொடர்ந்து மற்றவர்கள் பயணிக்க வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் செய்யும் விஷயத்தில் நேர்மையாக இருப்பது அவசியமாகும். தெளிவான அறிவாற்றலால் சொத்து சேர்க்கையில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும் எனவே உடனுக்குடன் உடல் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது நல்லது. யோகம் பெற பச்சைப் பயறை புதன் கிழமைகளில் கோவிலில் தானம் செய்யுங்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் பெயர்ச்சியால் செய்யும் வேலையில் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இருந்த நீங்கள், இனி ஒரு படி மேல் நோக்கி செல்ல இருக்கிறீர்கள். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகப் பலன்கள் கிட்டும் காலமாக உள்ளது. கூட்டு முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் உள்ளுறுப்புகள் விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். யோகம் பெற எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி விரய ஸ்தானத்தில் வந்து அமர இருப்பதால் எவ்வளவு வருமானம் வந்தாலும் வந்த வழியே சென்று கொண்டிருக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை அலசி ஆராயாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். புதன் அமர்ந்திருக்கும் இடம் உங்களுக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மனதை அலைபாய விடாதீர்கள். யோகம் பெற மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி லாப ஸ்தானத்தில் பயணிக்க இருப்பதால் ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிலம், வீடு தொடர்பான அதிருப்திகள் மறைந்து, நினைத்ததை அடைந்து காட்டக்கூடிய வாய்ப்புகளை பெறப் போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் பெருகும் என்பதால் நினைத்ததெல்லாம் இனி நடக்கும் அதிர்ஷ்டம் உண்டு. பிள்ளை வரம் வேண்டி எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். யோகம் பெற பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி சனிக்கிழமைகளில் வழிபடுங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நீங்கள் நினைத்த அளவிற்கு நன்மைகள் உண்டாக கூடிய அமைப்பாக இருக்கிறது. புத பகவான் உங்களுடைய வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை கொடுப்பார். எதிர்பார்க்கும் லாபத்தில் குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கி, ஒருவரை ஒருவர் பரஸ்பர புரிந்துணர்வு கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். புதன் சாதகமாக இருப்பதால் தாய் வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். யோகம் பெற வெண்ணிற சந்தனத்தை தினமும் நெற்றியில் அணிந்து கொள்ளுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு 9ஆம் இடத்தில் குரு பகவான் பயணம் செய்ய இருப்பதால் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. பணம் பல வகைகளில் இருந்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்க கூடும். யாருக்கும் தேவையற்ற கடன்களை வழங்க வேண்டாம். புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைந்து செட்டில் ஆகிவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு நினைத்தபடி இருக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஓங்கி காணப்படும். மனைவி வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன்களை பெற இருக்கிறீர்கள். உடல் நலனில் மட்டும் சற்று கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. யோகம் பெற பசுக்களுக்கு பச்சை காய்கறிகளை தானம் செய்யுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் பல்வேறு நன்மைகள் நடக்கும். எட்டாவது இடத்தில் அமர்ந்திருப்பதால் கொடுத்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்ட பலன்களை காண கூடும். எனினும் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டி யோக பலன்கள் பெறுங்கள். சமயோசித புத்தி மற்றும் நிதானம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பச்சைப் பயறை தானம் கொடுக்க செல்வ சேர்க்கை உண்டாகும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி உங்களுக்கு குடும்ப பொறுப்புகளில் இருந்து சில சிக்கல்களை உண்டு பண்ணும் அமைப்பாக இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு ஊடல்கள் அவ்வப்போது வந்து செல்லும். சிறிய விஷயங்களை பெரிதாக பார்க்காமல், எப்படியும் போகட்டும் என்று விட்டு விடுங்கள். களத்திர ஸ்தானத்தில் புதன் பயணிக்க இருப்பதால் கேட்ட இடங்களில் இருந்து கேட்டவை கிடைக்கும். தேவையற்ற கடன்களை தவிர்க்க வேண்டும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படலாம். உடல் நலனில் அலட்சியம் காண்பித்தால் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும். யோகம் பெற சகோதரி அல்லது அத்தை முறையில் இருப்பவர்களுக்கு பச்சை நிற வஸ்திரம், வளையல் போன்றவற்றை பரிசளியுங்கள்.

- Advertisement -