இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு சாப்பாடு என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. காலை ஒரு தோசை மதியம் ஒரு ஜங்க் ஃபுட், அதேபோல் இரவு ஒரு ஜங்க்ஃபுட் என கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உடல்நலனைக் கெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் உணவை அதிகமாக சாப்பிடுவதால் அவர்களின் உடல் அதிக பருமனாக இருக்கிறதே தவிர உடம்பில் எந்த விதமான நோய் எதிர்ப்பு சக்திகளும் இருப்பதில்லை. அதோடு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இளம் வயதிலேயே ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கால்சியத்தின் அளவும் குறைவாக இருக்கிறது. இதனால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் சீக்கிரமாக தொடங்கிவிடுகிறது. இவற்றிலிருந்து விடுபட இந்த ஒரு உணவுப் பொருளை தினமும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எள் – 3 ஸ்பூன், வடித்த சாதம் – 200 கிராம், உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன், வரமிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு – 10.
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு தட்டிற்க்கு மாற்ற வேண்டும். பிறகு அதே போல் எள்ளையும் வறுத்து அதே தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 4 வரமிளகாயை வறுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலையையும் வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக அடுப்பை அனைத்து, கடாயின் சூட்டிலேயே பெருங்காயத்தையும் வறுத்து தட்டில் சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை சிறிது நேரம் ஆற வைத்து, காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளித்து, பின்னர் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக பொறிக்க வேண்டும். பிறகு இரண்டு வர மிளகாயை இரண்டாக கீறி சேர்க்க வேண்டும். அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு சாதத்தை எண்ணெயில் சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்த எள்ளுப்பொடியிலிருந்து 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விட்டால் போதும். சுவையான எள்ளு சாதம் தயாராகிவிடும்.