பலரது வீட்டிலும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அதிகமாக செய்யப்படுவது சட்னி தான். பெரும்பாலும் தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னியை தான் அதிகமாக செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சட்னியில் பலவகை இருக்கிறது. கார சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என அனைத்தும் பலரும் அறிந்தது தான். இவ்வாறு தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்வதை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய சுவைமிகுந்துமான இந்த கேரட் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இன்னும் இரண்டு இட்லி, தோசை சேர்த்து சாப்பிடுவார்கள். இதனை செய்வது மிகவும் எளிமையான விஷயம் தான். வாருங்கள் இந்த கேரட் சட்னியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கேரட் – 4, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 4 பல், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, எள் – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், தேங்காய் – மூன்று சில்லு, கடுகு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் நான்கு கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எள் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு தட்டிற்க்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.
பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பச்சை மிளகாய் மற்றும் 3 சில்லு தேங்காயைத் துருவி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு இவற்றையும் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும்.
அதன் பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் உப்பு, புளி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்கவேண்டும். கடாயில் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, இந்த கலவையை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரட் சட்னி தயாராகிவிட்டது. இதனை உப்புமா, பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகிய அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.