முன்பெல்லாம் வீட்டில் ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும் என்றால் பாயாசம், கேசரி போன்றவைகளை தான் பெரும்பாலும் செய்வார்கள். இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே செய்ய கூடிய எளிய பல இனிப்பு வகைகள் உள்ளது . அந்த வகையில் இந்த கேரட், ,பீட்ரூட்டில் செய்யும் அல்வா பெரும்பாலும் அனைவரும் ஏன், சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விட கூடிய ஒன்று தான். இப்போது இந்த கேரட் அல்வாவை இன்னும் சுலபமாக அதே வகையில் அதிக ருசியாக செய்வது எப்படி என்பது இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: கேரட் -1/2 கிலோ, பால் – 1 1/2 கப், சர்க்கரை -1/2 கப், முந்திரி, பாதாம் பருப்பு – 20, நெய் -3 டேபிள் ஸ்பூன், பால் பவுடர் – 2 டீஸ்பூன், ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்.
முதலில் கேரட்டை நன்றாக தோல் சீவி சுத்தம் செய்த பிறகு காய் சீவும் சிவலில் நன்றாக சீவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிய பிறகு துருவிய கேரட்டை அதில் சேர்த்து கொஞ்சம் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வரை இந்த நெய்யில் கேரட்டை வதக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு பால் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு வேக வைத்து கொள்ளுங்கள்.
இப்போது குக்கர் விசில் இறங்கியதும் மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து லோ ஃப்ளேமில் வைத்து இந்த கேரட் நன்றாக வேக வைக்க வேண்டும். இப்பொழுது மீதம் இருக்கும் அரை கப் பாலையும் சேர்த்து பாலும் கேரட்டும் நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்த்தவுடன் கேரட் மறுபடியும் இளக ஆரம்பிக்கும். ஆனால் லோ பிளேமில் வைத்து கிண்டும் போது சர்க்கரை பால் எல்லாம் சுண்டி அல்வா பதத்திற்கு வந்து விடும். இப்போது இரண்டு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து இதை சேர்க்கும் போது இந்த அல்வாவின் சுவை அதிகமாக இருக்கும்.உங்களிடம் கன்டென்ஸ் மில்க் இருந்தால் அதையும் சேர்க்கலாம். கடைசியாக எடுத்து வைத்துள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரி, பாதாம் இரண்டையும் நல்ல சிவக்க வறுத்து அதையும் இதில் சேர்த்து மீதம் இருக்கும் நெய்யும் இதில் ஊற்றி இறக்கி விடுங்கள். சுவையான கேரட் அல்வா ரெடி.
இதை அப்படியே சூடாக வைத்தும் சாப்பிடலாம். சூடு ஆறிய பிறகு பிரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் இது சுவை அருமையாக இருக்கும்.
நீங்கள் நார்மலாக பச்சையாக கேரட்டை அரைத்து உற்றியோ அல்லது பாத்திரத்தில் நேரடியாக பாலில் வேக வைத்து செய்வதை விட இந்த முறை மிகவும் சுலபம். அது மட்டும் இன்றி சீக்கிரம் செய்ய முடியும் சுவையும் பிரமாதமாக இருக்கும் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.