தித்திக்கும் கேரட் பாயாசம் செய்முறை

carrot payasam
- Advertisement -

நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் இனிப்பு சுவை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக மதிய வேளையில் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிட வேண்டும் என்பது என்ற ஒரு மரபு இருந்து வருகிறது. அதனால் தான் அன்றைய காலம் தொட்டு விருந்து என்று வந்தால் கண்டிப்பான முறையில் அந்த விருந்தில் இனிப்பு சுவைக்காக பாயாசம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும்.

பாயாசத்தை பல வகைகளில் நாம் தயார் செய்யலாம். பல பொருட்களை போட்டும் தயார் செய்யலாம். எவ்வளவு பொருட்களை போட்டாலும் அதன் இனிப்பு சுவை அனைவரையும் விரும்பி சாப்பிட வைக்கும். அப்படிப்பட்ட பாயாசத்தில் நாம் சேர்க்கக்கூடிய பொருட்களை பொறுத்து அதன் சுவையை இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் இனிப்பு சுவை மிகுந்த கேரட்டை வைத்து எப்படி பாயசம் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நெய் – 2 டீஸ்பூன்
  • கேரட் – 1
  • ஜவ்வரிசி – 1 கப்
  • பால் – 1/2 லிட்டர்
  • ரவை – 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 2
  • நாட்டு சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பாதாம் பிஸ்தா – விருப்பத்திற்கு ஏற்றவாறு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து, நெய் உருகியதும் துருவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கேரட் நன்றாக வதங்கியதும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் மறுபடியும் ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி நெய் உருகியதும் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஜவ்வரிசி சிவக்க வறுத்த பிறகு ஜவ்வரிசியையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே கடாயில் அரை லிட்டர் பாலை ஊற்றி பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை சேர்த்து வேக விட வேண்டும். ஜவ்வரிசி முக்கால் பங்கு வெந்ததும் இதனுடன் வதக்கி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.

- Advertisement -

கேரட்டும் நன்றாக வெந்த பிறகு இதனுடன் ரவையை சேர்த்து வேகவிட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு இதில் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து அது கரையும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நாட்டுச்சர்க்கரை கடைந்ததும் அதை எடுத்து அப்படியே வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் பாயாசத்தில் ஊற்றி விட வேண்டும்.

விருப்பம் இருப்பவர்கள் பாதாம், பிஸ்தா முந்திரி போன்றவற்றை சிறு சிறு துண்டுகள் ஆகவோ அல்லது பொடித்தோ போடலாம். அவ்வளவுதான் கேரட் பாயாசம் தயாராகிவிட்டது. இந்தப் பாயாசத்தை சூடாகவும் சாப்பிடலாம் ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்றும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்டைல் கடலை கறி செய்முறை

எப்பொழுதும் ஒரே போல் பாயாசத்தை வைப்பதற்கு பதிலாக இப்படி புதுவிதமாக கேரட்டை வைத்து பாயாசம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வித்தியாசமான பாயாசத்தை செய்து தர முடியும்.

- Advertisement -