கேரளா ஸ்டைல் கடலை கறி செய்முறை

kadalai curry
- Advertisement -

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவுப் பொருட்கள் பிரபலமாக திகழும். என்னதான் மற்ற மாநிலங்களில் அதே உணவுப் பொருளை செய்தாலும் அந்த மாநிலத்திற்கு என்று தனியாக ஒருவித சுவை இருக்கும். அந்த வகையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த கடலை கறியை நம்ம ஊரிலும் சுவை மாறாமல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் கடலை கறியை செய்து சாப்பிடுவார்கள். கேரளாவிற்கு செல்பவர்களும் கண்டிப்பான முறையில் இந்த கடலை கறியை சுவைத்து இருப்பார்கள். இந்த கடலைக்கறியை ஆப்பம், இடியாப்பம், புட்டு ஏன் சாதத்திற்கு கூட பயன்படுத்தி சாப்பிடலாம். கேரளாவில் செய்வது போலவே அப்படியே எப்படி கடலை கறியை செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருப்பு கொண்டை கடலை – 1/4 கிலோ
  • தேங்காய் துருவியது – 1 கப்
  • கருவேப்பிலை – 3 இனுக்கு
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • இஞ்சி நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – 2
  • பிரியாணி இலை – 1
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • பொடியாக நறுக்கிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் கொண்டைக்கடலையை சுத்தம் செய்து முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் ஊறி இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு புதிதாக கொண்டைக்கடலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். அதற்குள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயை அதில் சேர்த்து ஒரு இனுக்கு கருவேப்பிலையும் சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

தேங்காய் லேசாக சிவந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள் இரண்டையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய இந்த பொருட்களை அப்படியே ஆற வைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசம் நீங்கிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்ந்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு நாம் வேகவைத்து எடுத்திருக்கும் கொண்டைக்கடலையுடன் வதக்கிய இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மறுபடியும் குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

நாம் ஏற்கனவே தேங்காய் வறுத்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து விட்டு பிறகு அதனுடன் சோம்பை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக விழுது போல அறைத்துக் கொள்ளுங்கள். குக்கர் விசில் சென்ற பிறகு கொண்டைக்கடலையை ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இது கொதிக்க ஆரம்பித்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொண்டைக்கடலை வெந்தவுடன் அதில் இருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் கொண்டைக்கடலை மட்டும் தனியாக எடுத்து வைத்து அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொதிக்கின்ற இந்த கொண்டைக்கடலை மசாலாவில் பட்டை, பிரியாணியிலை, தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையையும் அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது ஒரு தாலிக்கும் கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், பொடியாக நறுக்கிய தேங்காய், ஒரு இனுக்கு கருவேப்பிலை இவற்றை சேர்த்து தேங்காய் பொன்னிறமாகும் வரை வதக்கி அதை அப்படியே கொதிக்கின்ற கடலை கறியில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் கடலைக்கறி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பூண்டு தொக்கு செய்முறை

நம்ம ஊரு சமையல மட்டும் சாப்பிட்டு போர் அடிச்சவங்க இந்த மாதிரி அப்பப்போ வேற மாநிலத்தை சேர்ந்த ஸ்பெஷலான ஐட்டங்களையும் செஞ்சு சாப்பிட்டால் நல்லா இருக்கும்.

- Advertisement -