விதவிதமாக எத்தனையோ சட்னி ரெசிபிகளை தெரிந்து கொள்கின்றோம். தினம்தோறும் செய்து அசத்தலாம் அல்லவா? ஒரே மாதிரி சாப்பிட்டால் போர் அடித்து விடும். அந்த வரிசையில் கேரட்டையும் கொத்தமல்லித் தழையையும் வைத்து காரசாரமான ஆந்திரா ஸ்டைலில் ஒரு சூப்பர் சட்னி ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். புத்தம் புதிய சுவையில் இதுவரைக்கும் நீங்கள் சுவைக்காத ருசியில், ஒரு சட்னி ரெசிபி இது. மிஸ் பண்ணாதீங்க.

இது செய்யறது ரொம்ப கஷ்டம் இல்லை. இந்தத் துவையலை சுடச்சுட சாதத்தில் பிசைந்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரைத்து தாளித்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
முதலில் 200 கிராம் அளவு கேரட்டை தோல் சீவி கொஞ்சம் பெரியதாகவே துருவி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழையை வேரை மட்டும் நீக்கி விட்டு தண்டுகளுடன் கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு பொருட்களும் அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 4, உளுந்து – 1 ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் – 4, இந்த பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, துருவிய கேரட் போட்டு, பச்சை வாடை நீங்கும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
கேரட் பச்சை வாடை நீங்கியதும் தயாராக எடுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளை போட்டு 2 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிகக் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி துவையலாக அரைத்து எடுத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், ஆஹா என்ன சுவை. கேரட் வாடை எல்லாம் இந்தத் துவையலில் நிச்சயம் வீசாது. நீங்க துவையலை அரைச்சு ருசித்து பார்த்தாதால் தெரியும்.

இந்த துவயலில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கரைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து போட்டு இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அருமையாக இருக்கும். வித்தியாசமான இந்த கேரட் சட்னி ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.