சந்திர கிரகணம் 2022 எப்போது, நேரம்

- Advertisement -

சந்திர கிரகணம் 2022 நவம்பர் நேரம்

பொதுவாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என்பது இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஒரு சூரிய கிரகணம் மற்றும் ஒரு சந்திர கிரகணம் நிகழ்வாவது நடைபெறும். சில சமயங்களில் ஒரே வருடத்தில் 2 அல்லது 3 சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும். எது எப்படி இருந்தபோதிலும், சூரிய – சந்திர கிரகண நிகழ்வுகளுக்கு இந்திய ஆன்மீகம் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அந்த வகையில் நவம்பர் 8, 2022 அன்று நடைபெறவிருக்கின்ற சந்திர கிரகணம் பற்றியும், அந்த சந்திர கிரகணத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்தும் இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

சந்திர கிரகணம் 2022 நேரம் | Chandra grahan 2022 November time Tamil

இந்த சந்திரகிரகணமானது இந்திய நேரப்படி மாலை 5.32 மணிக்கு தொடங்கி மாலை 6.18 மணி வரை நீடிக்கின்றது. மொத்தம் 45 நிமிடங்கள் 52 நொடிகள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

உலகில் பல பகுதிகளில் மக்கள் பார்க்கக்கூடிய இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மட்டுமே ஓரளவிற்கு முழுமையாக பார்க்க முடியும் எனவும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பகுதி அளவிலேயே பார்க்க முடியும் எனவும் இந்திய வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் தொடங்கி அது முடிகின்ற காலம் வரை தீட்டுக் காலம் என கருதப்படுகிறது. ஆனால் கிரகணங்கள் தொடங்குகின்ற நேரத்திற்கு முன்பாகவே கிரகணங்களுகுரிய தீட்டு காலம் தொடங்குவதாக ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி நவம்பர் 8ஆம் தேதி மாலை 5.32 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகின்றது என்றாலும் கிரகண தீட்டு காலம் என்பது காலை 9.21 மணிக்கு தொடங்கி சந்திர கிரகணம் முடியும் நேரமான மாலை 6.18 மணி வரை நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

எனவே அனைவரும் சந்திர கிரகணம் அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு செல்வது அல்லது வீட்டில் பூஜைகள் செய்வது போன்ற செயல்களை சந்திர கிரகண தீட்டு காலம் ஏற்படவிருகின்ற காலை 9.21 மணிக்கு முன்பாகவே செய்துவிடவேண்டும். சந்திர கிரகண தினத்தில் எத்தகைய முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், சுப காரிய முயற்சிகள் போன்ற தள்ளிப்போட வேண்டும்.

சந்திர கிரகண பலன்கள்

ஜோதிடர்களின் கணிப்பு படி இந்த சந்திரகிரகணம் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தில், சந்திரன் மேஷ ராசியில் இருக்கின்ற பரணி நட்சத்திரத்திற்கு பிரவேசம் செய்வதாலும், சந்திரகிரகணம் நடைபெறுவது செவ்வாய்க்கிழமையாக இருப்பதனாலும் உலகில் கடல் கொந்தளிப்பு, தீவிரமான மழை, வெள்ளம் போன்றவை ஏற்பட கூடும் எனவும், மக்கள் பலருக்கும் பதட்டமான மனநிலை, உணர்ச்சிவசப்படுதல், போன்றவை ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

சந்திர கிரகணத்தின் போது செய்ய கூடாதவை

சூரிய கிரகண நிகழும் பொழுது நாம் என்னென்ன செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றதோ அந்த விதிகள் சந்திரகிரகணத்திற்கும் பொருந்தும். சந்திர கிரகணம் தொடங்கி அது முடியும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சந்திர கிரகண நேரத்தில் உணவு, பானங்கள் போன்றவற்றை அருந்தக்கூடாது. கிரகண நேரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவேண்டாம்.

தெய்வங்களுக்கான பூஜைகளை இந்த கிரகண நேரத்தில் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிரகண நேரத்தில் உறங்கக்கூடாது. தம்பதிகள் சேரக்கூடாது. மனதில் தீய சிந்தனைகளுக்கு இடம் தர கூடாது.

சந்திர கிரகணத்தின் போது செய்யவேண்டியவை

சந்திர கிரகணம் ஏற்படுத்துவதற்கு முன்பாகவே வீட்டில் இருக்கின்ற உணவு பொருட்கள், தண்ணீர் குடங்களில் தர்ப்பைப்புல் சிறிதளவு போட்டு வைக்கலாம். இப்படி செய்வதால் சந்திர கிரகணத்தால் ஏற்படக்கூடிய கிரகண தோஷ எதிர்மறை ஆற்றல்களால் உணவு பானங்களை பாதிக்காமல் தடுக்கும் என ஜோதிட சாஸ்திர அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணத்தின் பொழுது வீட்டில் பூஜைகள் செய்ய கூடாது என கூறப்பட்டுள்ளதே தவிர, மந்திர ஜபம் தியானம் போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.

கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

சிவபெருமானுக்குரிய மகா மிருத்தியுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவபந்தனாத்
ம்ருத்தியோர் முஷியமாம்ருதாத்

திருமாலின் புகழ் பாடும் விஷ்ணுசஹஸ்ரநாம பாடலில் சிவபெருமான் இராமனின் புகழை பாடுகின்ற மந்திரமான
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

போன்ற மந்திரங்களை இந்த சந்திர கிரகண நேரத்தில் உங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் பாராயணம் செய்யலாம்.

சந்திர கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை:
கிரகணம் முடிந்ததும் தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். உடுத்தியிருந்த ஆடைகளையும் துவைத்து போட்டு, புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிதளவு கல்லுப்பு, சிறிது மஞ்சள் பொடி போட்டு நன்கு கலந்து அந்த நீரைக் கொண்டு பூஜையறை உட்பட வீடு முழுவதும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் இறைவனுக்கு தீபமேற்றி பழம், கற்கண்டு போன்ற ஏதாவது ஒன்றை நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்த பிறகு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். சந்திரகிரகண தினத்தன்று மேற்சொன்ன விதிகளை கடைபிடிப்பதால் சந்திர கிரகணத்தால் ஏற்படுகின்ற கிரகண தீட்டு தோஷங்களால் நம் வாழ்வில் பாதகங்கள் ஏற்படாமல் தடுத்து நற்பலன்கள் உண்டாகச் செய்யும்.

சந்திர கிரகண தோஷம் நீங்க

இந்த சந்திர கிரகணத்தை பொறுத்தவரை அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது. இவர்கள் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், உளுந்து, அரிசி போன்ற பொருட்களை ஏழை எளியோருக்கு கிரகணம் முடிந்த பிறகு தானம் செய்வது நல்லது. இதன் மூலம் இவர்களுக்கு கிரகண தோஷம் நீங்கும்.

- Advertisement -