அடிக்கடி சப்பாத்தி செய்பவர்களுக்கு மீந்து போன சப்பாத்தியை வைத்து என்ன செய்வது? என்று தெரியாமல் குப்பையில் போட்டு விடுவது உண்டு. மீந்து போன சப்பாத்தியை கூட ரொம்ப ருசியான ஒரு டிஷ்ஷாக மாற்றக்கூடிய அற்புதமான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். சூப்பரான டேஸ்டியான முட்டை சப்பாத்தி கொத்து பரோட்டா எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.
சப்பாத்தி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
மீந்து போன சப்பாத்தி – நான்கு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி – தலா 1, பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தக்காளி – ஒன்று, முட்டை – ரெண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லி தழை – சிறிதளவு.
சப்பாத்தி மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் உங்களிடம் இருக்கும் மீந்து போன சப்பாத்தியை ஒன்றுடன் ஒன்றோடு அடுக்கி பாயை சுருட்டுவது போல சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கத்தரிக்கோலை பயன்படுத்தி முனைப்பகுதியில் இருந்து வெட்டிக் கொண்டே வாருங்கள். இதனால் நீளவாக்கில் சப்பாத்தி துண்டுகள் நமக்கு கிடைக்கும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.
அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகிய மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் பெரிய வெங்காயம் ஒன்றை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். இதனை நன்கு பொன் நிறமாக வதக்கி விடுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து வதக்கி விடுங்கள்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்குங்கள். பச்சை வாசம் போனதும் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். தக்காளி மசிந்ததும் கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இப்போது தேவை என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கலாம். அடி பிடிக்காமல் குறைந்த தீயில் வைத்து வதக்கி விட்டு நடுவில் சிறிதளவு பள்ளமாக தோண்டிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றுங்கள்.
முட்டைக்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல சிட்டிகை அளவு உப்பை தூவி நன்கு பிரட்டி விடுங்கள். முட்டை ஓரளவுக்கு வெந்து வந்ததும், வெட்டி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். எல்லா கலவையும் ஒன்றுடன் ஒன்று கலந்து வரும் பொழுது நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் மல்லி தழையை சிறிதளவு உதிர்த்து தூவி விடுங்கள். ரொம்பவே சூப்பரான சப்பாத்தி கொத்து பரோட்டா இப்படி நீங்களும் செஞ்சு பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.