இப்படி சப்பாத்திக்கு மாவு பிசைந்து பாருங்க! ஆறினாலும் மிருதுவாகத்தான் இருக்கும். சூப்பர் சப்பாத்தியில் மறைந்திருக்கும் சின்ன ரகசியம்!

Chapathi Mavu

நிறைய பேர் வீட்டில் சப்பாத்தி செய்வார்கள். ஆனால், அது மிருதுவாக இருக்காது. மிகவும் தடிமனாக இருக்கும். மாவு வேகாத பக்குவத்தில் இருக்கும். சில பேர் வீடுகளில் சப்பாத்தி ஆறிய பின்பு சாப்பிடவே முடியாது. சில பேர் வீடுகளில் சப்பாத்தியை, மாவு தொட்டு தேய்த்து நறநறவென்று செய்வார்கள். அப்படி மாவு தொட்டு தேய்க்கும் போது, அந்த சப்பாத்தி சீக்கிரம் கல்லில் போட்டால் வேகாது. இப்படி பல தவறுகள் சப்பாத்தி சுடும்போது செய்வீர்கள். சுவையான, சூப்பரான சப்பாத்தி எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Chapathi maavu

சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-2 ஆழாக்கு
நல்லெண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர் தேவையான-அளவு

கோதுமை வாங்கி அரைத்து சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்டா மாவில் சுடுபவர்களும் இதே முறையை பின்பற்றலாம். இருப்பினும் கோதுமை மாவில் செய்வது சிறந்தது. அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு, தூள் உப்பு சேர்த்து, முதலில் மாவில் கலந்து விடுங்கள். அதன்பின்பு மாவின் நடுவில் சிறியதாக குழி மாதிரி பண்ணிக்கோங்க!

Chapathi maavu

அந்த குழியின் நடுவில், முதலில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி விட்டு, அதன் பின்பு, எடுத்து வைத்திருக்கும் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, (நல்லெண்ணையும், தண்ணீரையும்), நன்றாக கலக்கி விட்டு, அதன் பின்பு மாவை சேர்த்து பிசைய தொடங்குங்கள். எப்போதுமே மாவை உள்ளங்கைகளில் படும் அளவிற்கு போட்டு அழுத்தி பிசைய கூடாது. ஐந்து விரல்களால் மெதுவாக பிசைந்து கொண்டே, தண்ணீர் தெளித்து தெளித்து பிசைய வேண்டும்.

- Advertisement -

இறுதியாக நீங்கள் பிசைந்து முடிக்கும்போது, அந்த பாத்திரத்திலும் மாவு ஒட்டி இருக்கக்கூடாது. உங்கள் கைகளிலும் மாவு பிசுபிசு என்று ஒட்டக்கூடாது. அதுதான் சரியான பதம். இப்படி மாவு பிசைந்தீர்கள் என்றால், சப்பாத்தி திரட்டும்போது மாவு தொட்டு திரட்ட வேண்டிய அவசியமே இருக்காது.

Chapathi maavu

பிசைந்த மாவை, ஒரு தட்டு போட்டு மூடி, ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பாக அந்த சப்பாத்தி மாவை எடுத்து மீண்டும் 5 நிமிடங்கள் வரை மிருதுவாக பிசைந்தால் போதும். இப்போது சப்பாத்திக்கு தேவையான மாவு ரெடி.

மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் போட்டு தேய்த்துக் கொள்ளுங்கள். வட்டமாக தேய்த்த பின்பு, அதன் உள்ளே ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு தடவி, நான்காக மடித்து, மீண்டும் தேய்த்துக் கொள்ளுங்கள்(முக்கோண வடிவில்). மாவு தொட்டு தேய்க்காதீர்கள்! சப்பாத்தி தேய்க்கும் பலகையில் ஒட்டும் பட்சத்தில் ஒரு சொட்டு எண்ணெயை சப்பாத்தி பலகையில் விட்டு தடவி, வேண்டுமென்றால், தேய்த்துக் கொள்ளுங்கள். சப்பாத்தியை மெல்லிசாக தான் தேய்க்க வேண்டும். (மெல்லிசாக தேய்க்கும் பழக்கம், சப்பாத்தி மாவை தேய்க்கத்தேய்க்க தான் வரும்.

தோசைக்கல் அடுப்பில் நன்றாக சூடு ஆன பின்பு, சப்பாத்தியை தோசைக் கல்லின் மேல் போட வேண்டும். சப்பாத்தியை, 10 வினாடிகள் கழித்து திருப்பி போடுங்கள். 10 வினாடிகள் கழித்து மீண்டும் திருப்பி போட்டு விட்டு, லேசாக எண்ணை ஊற்றினால் போதும். சப்பாத்தி மேலெழும்பி உப்பி வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சப்பாத்தியை  போட்டவுடன் எண்ணெய் ஊற்றி விடக்கூடாது. இரண்டு பக்கமும் 10 வினாடிகள் சிவந்து, திருப்பி போட்ட  பின்புதான் எண்ணெய் ஊற்றவேண்டும்.

Chapathi maavu

இப்படி செய்த சப்பாத்தி, கட்டாயம் மிருதுவாக தான் இருக்கும். ஆரிய பின்பு கூட, இதன் சுவை மாறாது என்பது குறிப்பிடத்தக்கது. மாவு தொட்டு தேய்க்கும் சப்பாத்தியை விட, மாவு தொடாமல் தேய்த்து சுடும் சப்பாத்தி சுவையானது. பக்குவமானது. மிகவும் மிருதுவானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நிறைய பேர் வீடுகளில் இந்த குறிப்பை பின்பற்ற மாட்டார்கள். மாவை தண்ணியாக பிசைந்து, மாவு தொட்டு தேய்க்கும் பழக்கம் தான் இருக்கும். மாவில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இந்த முறையில் பிசைந்து, இப்படி ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்!