செட்டிநாடு ஸ்டைல் கார குழி பணியாரம் எப்படி செய்வது?

paniyaram
- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். ஆனால், குழிப்பணியாரத்திற்க்கு என்று மாவு அரைக்க ஒரு பக்குவம் உள்ளது. இந்த முறைப்படி மாவை பக்குவமாக அரைத்து குழிப்பணியாரம் ஊற்றினால் குண்டு குண்டாக புசுபுசுவென பார்ப்பதற்கு மேலே மொறுமொறுவென்று வரும். சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் குழி பணியாரம் செய்வது எப்படி.

paniyaram1

குழிப்பணியாரம் செய்ய மாவு அரைக்க தேவையான பொருட்கள். மாவு பச்சரிசி – 1 கப், இட்லி அரிசி – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1/4 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒரே பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

4 மணி நேரம் தண்ணீரில் ஊறிய இந்த பொருட்களை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கட்டியாக இட்லி மாவு ஆட்டுவது போல அரைத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து, 1 ஸ்பூன் அளவு உப்பு போட்டு மாவை உங்கள் கைகளைக் கொண்டு ஒரு முறை கரைத்து ஒரு மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைத்து விடுங்கள்.

paniyaram2

அவ்வளவு தாங்க. இதுதாங்க குழிப்பணியாரம் செய்யப்போற மாவு. கெட்டியாக இருக்கும் இந்த பணியார மாவிலிருந்து உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு மாவை எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மாவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

- Advertisement -

கரைத்த மாவு ரொம்பவும் கட்டியாகவும் இருக்க கூடாது. அதே சமயம் ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது. இந்தம்மாவுக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/4 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1 சேர்த்து தாளித்து, மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயய் – 1, பொடியாக நறுக்கிப் போட்டு, 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வெங்காயத்தை மூன்று நிமிடம் வதக்கி, பொடியாக நறுக்கிய – 3 பச்சை மிளகாய் சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி கருவேப்பிலை, 1 கொத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மீண்டும் வதக்கி இதை அப்படியே தயாராக எடுத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி விடுங்கள்.

இதில் ஆப்ப சோடா மாவு சேர்க்கவில்லை என்றாலும் பணியாரம் புசுபுசுவென வரும். தேவைப்பட்டால் 1/4 ஸ்பூன் அப்பச்சோடாவையும் சேர்த்து, கலந்து மாவை பணியாரம் ஊற்ற ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

குழிப் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா குழியிலும் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடான பின்பு தயாராக இருக்கும் குழிகளில் மாவை முக்கால் பாகம் ஊற்றினாலே போதும். மாவு வெந்து புசுபுசுவென பொங்கிவரும். பணியாரக் கல்லில் மேல்பக்கம் மாவு இருக்கும்போதே, பணியாரத்தை திருப்பிப் போட்டால், பணியாரம் புசுபுசுவென உருண்டையாக இருக்கும். அவ்வளவு தாங்க. இந்த பணியாரத்தை ஒரு தேங்காய் சட்னி காரச் சட்னியுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -