சிதம்பரம் நடராஜர் கோவில் ஒளிந்துள்ள எண்ணிலடங்கா ரகசியங்கள் பற்றி தெரியுமா ?

chidambaram-logo

பஞ்சபூதங்களின் தத்துவங்களை மிக பழமையான காலங்களிலேயே ஆராய்ந்தவர்கள் நமது முன்னோர்கள். நிலம், நீர், காற்று, நெருப்பு என நான்கு வகையான பஞ்சபூதங்களும் நமக்கு அதிகம் பரிச்சயமாக இருக்கிறது. ஆனால் “ஆகாயம்” அந்த இறைவனை போன்று சுலபத்தில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. இந்த ஆகாயத்தை தனது அம்சமாக கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிபவர் தான் சிதம்பரத்தில் “நடராஜராக” இருக்கும் சிவபெருமான். அந்த “சிதம்பரம் நடராஜ பெருமான்” கோவிலை பற்றிய பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

chidambaram 1

சிதம்பரம் கோவில் தல வரலாறு

தமிழகத்தின் மிக பழமையான கோவில்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஒன்று. இத்தலத்தில் இறைவனான சிவபெருமான் நடராஜராகவும், அம்பாள் உமையாம்பிகை மற்றும் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலின் மூலவராக சுயம்பாக தோன்றிய திருமூலநாதர் இருந்தாலும், உற்சவர் நடராஜ பெருமானே பிரதான மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

சோழ மன்னர்களின் கட்டுமான திறனுக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாகும். பல சோழ மன்னர்கள் எல்லாக்காலங்களிலும் இக்கோவிலை ஆதரித்து வந்துள்ளனர். முதலாம் பராந்தக சோழ மன்னன் 9 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் சிவபெருமானின் சந்நிதிக்கு “பொன் கூரையை” வேய்ந்தான். பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டிய மன்னனும் இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் “கம்போடியா” நாட்டு அரசன் இக்கோவிலின் இறைவனுக்கு தங்கம் மற்றும் மாணிக்க கற்களை கொண்ட நகைகளை தனது நாட்டு தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பியதாக கல்வெட்டு குறிப்புக்கள் கூறுகின்றன.

natarajar 1

முற்காலத்தில் தில்லை மரங்கள் இத்தலத்தில் அதிகம் இருந்ததால் இது தில்லைவனம் என அழைக்கப்பட்டது. இங்கு சிவ பெருமான் நவீன இயற்பியல் அறிஞர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கூறும் “பிரபஞ்ச நடனம்” ஆடும் நடராஜராக காட்சியளிக்கிறார். இவர் காலின் கட்டை விரலுக்கு அடியில் தான் பூமியின் மையப்புள்ளி இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாட்டியம் ஆடும் இந்த சிவபெருமானை “ஆடற்கூத்தன்” எனவும் அழைக்கின்றனர். 51 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இக்கோவில் தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோவில்களில் ஒன்று. “பஞ்சபூதங்களில்” சிதம்பரம் நடராஜர் கோவில் “ஆகாயத்தை” குறிக்கிறது. இந்த கோவிலின் சிறப்பு அம்சமாக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் நடராஜ பெருமான் சந்நிதிக்கு அருகிலேயே இருக்கும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

saivam saints

அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வராலும் பாடப் பெற்ற தலம் இது. மூவர் பாடிய தேவாரம் திருவோலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்ட இது. நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு இந்த தேவார பாடல்களை தொகுத்தார் திருமுறை கண்ட சோழ மன்னன். இத்தலத்தில் மாணிக்கவாசகர் இலங்கையை சேர்ந்த புத்த மதத்தை பின்பற்றும் மன்னன் ஒருவனின் ஊமை மகளை நடராஜரின் அருளால் பேச வைத்து அதிசயம் புரிந்தார். சிவனின் ஐந்து சபைகளில் இது சிற்சபையாகும்.

முற்காலத்தில் இத்தலத்தில் சிவபெருமான் வணங்கி தவமியற்றி வந்தார் மாத்யந்தினர் எனும் முனிவர். தினந்தோறும் இந்த தலத்திற்கு அருகிலுள்ள வனங்களில் உள்ள பூக்களை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சித்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு முறை பூக்களை பறிக்கும் போதும் அதில் பெரும்பாலானவை தேனீக்களால் அம்மலரில் உள்ள தேன் உறிஞ்சப்படுவதால், அத்தகைய பூக்கள் சிவபூஜைக்கு பயன்படாமல் போவதை எண்ணி வருந்தினார். தேனீக்கள் மலர்களை மொய்ப்பதற்கு முன்பாக இருட்டில் சென்று பூக்களை பறிக்கவும் தன்னால் இயலிவில்லை என்று சிவபெருமானிடம் வருந்தினார்.

viyakirapadhar

அப்போது அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான் மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்கு வசதியாக சிறுத்தை புலியின் கால்களையும், இருட்டில் நன்கு பார்க்கும் சக்தி கொண்ட அந்த சிறுத்தையின் கண்பார்வை திறனையும் மத்யந்தினருக்கு அருளினார் ஈஸ்வரன். இதன் காரணமாக மத்யந்தினர் வேங்கை என பொருள் கொண்ட வியாக்கிரம் என பெயர் கொண்டு அன்று முதல் “வியாக்கிரபாதர்” முனிவர் என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வியாக்கிர பாத முனிவருக்கும், “யோகக்கலையின்” பிதாமகரான “பதஞ்சலி” முனிவருக்கும் ஒரே நேரத்தில் தனது திருநாட்டிய நடன தரிசனத்தை தந்து அருள் புரிந்தார் சிவபெருமான்.

சிதம்பரம் தல சிறப்பு

சிதம்பரம் என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது “சிதம்பர ரகசியம்” என்ற சொல்வழக்காகும். இதன் உண்மையான பொருள் “சித்” எனும் அறிவு “அம்பரம்” எனும் வெட்டவெளியில் கலக்கும் போது நாம் ஒன்றுமில்லாதவர்கள் எனும் வாழ்க்கை தத்துவத்தை விளக்குவதுதான் சிதம்பர ரகசியமாகும். அதனால் தான் இக்கோவிலில் மூலவர் சந்நிதியில் வெட்டவெளியை திரையிட்டு மறைத்து, அதற்கு தீபாராதனை காட்டப்பட்டு, பிறகு திரையை விலக்கி சூனிய தத்துவத்தை பக்தர்களுக்கு காண்பிக்கின்றனர்.

cosmic

சித்தர்கள் கண்டுபிடித்த மனித உடலின் தத்துவத்தின் படி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இருக்கும் 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் மூச்சின் சரியான எண்ணிக்கையாகும். அக்கூரையில் அடிக்கப்பட்டிருக்கும் 72,000 ஆணிகள் மனித உடலில் ஓடும் 72,000 நாடி, நரம்புகளை குறிப்பதாகும். இக்கோவிலில் இருக்கும் 9 வாயில்கள் மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிக்கிறது. “சிவாயநம” எனும் 5 எழுத்துக்களை குறிக்கும் பொன்னம்பலத்தின் 5 படிகள், 64 கலைகளை குறிக்கும் 64 சாத்துமரங்கள், 96 தத்துவங்களை குறிக்கும் 96 ஜன்னனல்கள், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 5 பூதங்களை குறிக்கும் வகையில் இக்கோவிலின் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

natrajaa

மார்கழி மாதங்களில் “திருவெம்பாவை” பாடப்பட்டு சிவனுக்கு விஷேஷ வழிபாடுகள் நடக்கின்றன. அம்மாதத்தில் வரும் திருவாதிரை தினம் வெகு சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆனித்திருமஞ்சனம், மகாசிவராத்திரி போன்ற விஷேஷ தினங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிதம்பர நடராஜரை வழிபட்டால் முக்தி உறுதி என்பது சிவனடியார்களின் கருத்தாகும். மேலும் மனதில் எத்தகைய கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களோடு இங்கு வந்து சிவபெருமானை மனமுருகி வழிபடுவதால் அவை நிச்சயம் நிறைவேறும் என கூறுகிறார்கள். நாட்டிய கலையில் சாதிக்க விரும்புபவர்கள் அதிகம் வந்து வழிபடும் கோவிலாக சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கிறது.

கோவில் அமைவிடம்

அருள்மிகு சிதம்பரம் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் வாடகை வண்டி வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணிமுதல் 12.30 வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை

கோவில் முகவரி

அருள்மிகு சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம் – 608 001

இதையும் படிக்கலாமே:
பழனி முருகன் கோவிலை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chidambaram temple details in Tamil. We also have Chidambaram Nataraja kovil history in Tamil, Chidambaram Nataraja kovil timings, Chidambaram Nataraja kovil ragasiyam in Tamil.