பழனி முருகன் கோவிலை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

palani-temple
- Advertisement -

மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும். தவ வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும், ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் சுலபத்தில் வந்துதவுவார் முருகன். அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில் கொண்டிருக்கும் புனித தலம் தான் “பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்”. இக்கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

kantha sasti kavasam lyrics

பழனி மலை முருகன் கோவில் தல வரலாறு

மிகவும் பழமையான கோவில் இந்த பழனி மலை பாலதண்டாயுதபாணி கோவில். இக்கோவில் முருகனின் “ஆறு படை” வீடுகளில் “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான்.

- Advertisement -

புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “நீயே ஞானவடிவானவன்” என்ற பொருள் கொண்ட “பழம் நீ” என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று.

தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்” சித்தரும் ஒருவர். அஷ்டமா சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவமியற்ற வந்த போது, அன்னை பார்வதி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்” ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை” வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர்.

- Advertisement -

bogar-murugan

மிக அற்புதமான இந்த நவபாஷாண சிலையை மக்களின் நன்மைக்காக இறைவனின் உத்தரவின் பேரில் செய்தார் போகமுனிவர். இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக பெற்று சாப்பிடும் பக்தர்களின் எப்படிப்பட்ட உடல் நோய்களையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டது. இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது.

இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்” எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம். பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த “இடும்பன்” எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் “சக்திகிரி,சிவகிரி” என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான் தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை உண்டானது.

- Advertisement -

kantha sasti kavasam lyrics

இந்த பழனி மலை முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

தல சிறப்பு

திருவண்ணாமலை அருணாச்சல மலையை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர். முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி” சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும். பொதுவாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் பழனி முருகன் கோவிலில் விஷேஷ நட்சத்திர தினங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு. மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி இந்த கோவிலில் வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

palani murugan

தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் கோடிக்கணக்கில் பக்தர்களின் காணிக்கையை பெரும் கோவிலாக பழனி மலை முருகன் கோவில் இருக்கிறது. பழனியாண்டவரை வழிபடும் பக்தர்கள் சிலர் தங்களின் தொழில், வியாபாரங்களில் கூட்டாளியாக கருதி, மிகுந்த லாபம் பெற்ற பிறகு அந்த லாபத்தில் பழனி முருகனுக்குரிய பாகத்தை காணிக்கையாக இக்கோவிலின் உண்டியலில் செலுத்துகின்றனர். திருப்பதியில் எப்படி தலைமுடியை மொட்டையடித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனரோ அது போல் பழனி முருகனுக்கும் முடியிறக்கி காணிக்கை செலுத்துகின்றனர். இங்கிருக்கும் போகர் சித்தரின் சமாதியில் வழிபடுவதால் இன்றும் சூட்சம வடிவில் இந்த பழனி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போகர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்தருள்கிறார். ஆன்மீக ஞானம் பெற, திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மேன்மை போன்றவற்றிற்காக அதிகளவில் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.

கோவில் அமைவிடம்

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழநி என்கிற ஊரில் இருக்கும் பழனி மலை மீது அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல அதிகளவில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி கோவில் உட்பட அத்தனை கோவில்கள், சந்நிதிகளும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

கோவில் முகவரி

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
பழனி
திண்டுக்கல் மாவட்டம் – 624 601

தொலை பேசி எண்

4545 242293

4545 242236

4545 242493

இதையும் படிக்கலாமே:
சூலம் திசை என்றால் என்ன அதற்கான பரிகாரம் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Palani Murugan kovil varalaru in Tamil, Palani Murugan kovil history in Tamil, Palani Murugan kovil timings, Palani Murugan kovil address, Palani Murugan kovil contact number, Palani Murugan kovil ph number and much more details about Palani Murugan Temple in Tamil.

- Advertisement -